விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. ஜூன் 10ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் 20 ஓவரில் திணறலாக விளையாடிய அந்த அணி வெறும் 113/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 46, டேவிட் மில்லர் 29 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் சாகிப் 3, தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 114 ரன்களை துரத்திய வங்கதேச அணியும் 20 ஓவரில் வெறும் 109/7 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.
வெற்றியை பறித்த விதிமுறை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 3, முகமதுல்லா 20 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 3 விக்கட்டுகள் சாய்த்தார். இந்த வெற்றியால் சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று தென்னாப்பிரிக்கா அசத்தியது. முன்னதாக இந்தப் போட்டியில் ஓட்நெய்ல் பார்ட்மேன் வீசிய 18வது ஓவரின் இரண்டாவது பந்தை வங்கதேச வீரர் முகமதுல்லா அடிக்கத் தவறி காலில் வாங்கினார்.
அதனால் தென்னாபிரிக்க அணியினர் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டனர். அப்போது களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்தார். அதற்கிடையில் முகமதுல்லா காலில் பட்ட பந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுக்காததால் பவுண்டரிக்கு சென்றது. அந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து முகமதுல்லா டிஆர்எஸ் எடுத்தார்.
அதை 3வது நடுவர் சோதித்த போது ஸ்டம்ப் மீது பந்து படாதது தெரிந்தது. அதனால் 3வது நடுவர் அந்த தீர்ப்பை மாற்றி நாட் அவுட் வழங்கினார். ஆனால் களத்தில் இருந்த நடுவர் முதலில் அவுட் கொடுத்த காரணத்தால் அந்தப் பந்தில் வங்கதேசத்திற்கு பவுண்டரி கிடைக்கவில்லை. ஒருவேளை களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் லெக் பைஸ் அடிப்படையில் வங்கதேசத்திற்கு 4 ரன்கள் கிடைத்திருக்கும்.
இதையும் படிங்க: 113 ரன்ஸ்.. தோற்பதற்கு நடந்த போராட்டம்.. வங்கதேசத்தை வீழ்த்திய தெ.ஆ.. இந்தியாவை முந்தி புதிய உலக சாதனை வெற்றி
அதனால் கடைசியில் வங்கதேசம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்காது. ஆனால் ஐசிசி “அப்பென்டிக்ஸ் டி விதிமுறைப்படி” டிஆர்எஸ் எடுத்ததும் அந்த பந்து காலாவதியாகி விட்டதாக கருதப்படும். அதனால் அவுட் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு நாட் அவுட்டாக மாற்றி வழங்கினாலும் அந்த பந்து காலாவதியாகிவிட்டதால் அதில் எடுக்கப்பட்ட ரன்கள் கொடுக்கப்படாது என்பது ஐசிசி விதிமுறையாகும். இந்த விதிமுறை தற்போது தங்களின் வெற்றியை பறித்ததால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.