என்னய்யா பிட்ச் இது? மீண்டும் கடுப்பாகி ஐசிசி வழங்கிய பெரிய தண்டனை – சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற கையோடு பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய இங்கிலாந்து முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. அதனால் 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய அந்த அணி 22 வருடங்கள் கழித்து தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி மைதானத்தில் இருந்த பிட்ச் தார் ரோட் போல இருந்ததை பயன்படுத்திய இங்கிலாந்து 2 இன்னிங்ஸிலும் சேர்த்து பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி 921 ரன்கள் குவித்தது.

அதிலும் முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்த அந்த அணி உலக சாதனை படைத்த நிலையில் பாகிஸ்தானும் பதிலுக்கு முதலில் இன்னிங்ஸில் 579 ரன்கள் அடித்தது. மொத்தத்தில் வேகம், பவுன்ஸ், சுழல் என எதற்குமே கை கொடுக்காமல் ஒரே சீரான வேகத்தில் இருந்த ராவல்பிண்டி பிட்ச் தார் ரோடு போல இருந்ததாக உலக அளவில் விமர்சனங்களும் கிண்டல்களும் எழுந்தன. முன்னதாக ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இதே போன்ற பிட்ச்கள் அமைக்கப்பட்டிருந்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

என்னய்யா பிட்ச்:
அப்போது அடுத்த தொடருக்குள் தரமான பிட்ச்சுகள் அமைக்கப்படும் என்று புதிய தலைவராக பொறுப்பேற்ற ரமீஸ் ராஜா வாயில் சொன்னாலும் செயலில் காட்ட தவறியதால் பாகிஸ்தான் வாரியத்தையும் அவரையும் சேர்த்து ரசிகர்கள் கிண்டலடித்தார்கள். இயற்கையை மிஞ்சி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சமமான பிட்ச்சை உருவாக்கி விடலாம் என்ற அந்நாட்டு வாரியத்தின் எண்ணமே இதற்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கும் குறைவாக இருந்ததாக ஐசிசி தற்போது அறிவித்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு போட்டி நடைபெற்ற பின்பும் அது பற்றிய அறிக்கையை அப்போட்டியை நடத்திய நடுவர் ஐசிசியிடம் சமர்ப்பிப்பார். அதிலும் குறிப்பாக அப்போட்டி நடைபெற்ற மைதானத்தின் பிட்ச்சுக்கு நன்று, சராசரியானது, சராசரிக்கும் குறைவானது போன்ற பிரிவுகளில் நடுவர் மதிப்பெண் வழங்குவார். அதை வைத்து தான் வருங்காலங்களில் மீண்டும் அந்த மைதானத்தில் போட்டி நடத்துவதற்கு ஐசிசி அனுமதி வழங்கும். அந்த வகையில் ராவல்பிண்டி பிட்ச் பவுலர்களுக்கு கை கொடுக்காமல் ஒருதலைபட்சமாக இருந்ததாக அப்போட்டியில் நடுவராக செயல்பட்ட ஆண்டி பைக்ராஃப்ட் ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த பிட்ச் பிளாட்டாக இருந்து எந்த வகையான பவுலர்களுக்கும் எந்த உதவியுமே செய்யாமல் இருந்தது. அதன் காரணமாகவே இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களும் அதிவேகமாக பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தார்கள். போட்டியின் போது ஆடுகளம் மேலும் மோசமடைந்தது. அதில் பவுலர்களுக்கு ஆதரவு குறைவாக இருந்ததால் ஐசிசி வழிகாட்டுதலின் படி அந்த ஆடுகளம் சராசரிக்கு குறைவாக இருப்பதை கண்டேன்” என்று கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட ஐசிசி ராவல்பிண்டி மைதானத்திற்கு ஒரு கருப்பு புள்ளியையும் தண்டனையாக கொடுத்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு நடைபெற்ற போட்டியிலும் இதே ஆடுகளம் இதே போல அமைக்கப்பட்டிருந்ததால் ஏற்கனவே ஒரு கருப்பு புள்ளியை ஐசிசி வழங்கியது. பொதுவாக ஒரு மைதானம் 5 கருப்பு புள்ளிகளை பெறும் போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு 12 மாதங்கள் ஐசிசி தடை விதிக்கும். அந்த வகையில் அடுத்தடுத்த போட்டிகளில் ராவல்பிண்டி மைதானம் பெற்றுள்ள இந்த அடுத்தடுத்த 2 கருப்பு புள்ளிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலுவையில் இருக்கும்.

இதையும் படிங்க: பாபர் அசாமை விட உங்கள தான் பிடிக்கும் ப்ளீஸ், விராட் கோலிக்கு பாக் ரசிகர்கள் வைத்த மனமுருக்கும் கோரிக்கை – நடக்குமா

அந்த 5 ஆண்டுகளுக்குள் கருப்பு புள்ளிகளின் எண்ணிக்கை ஐந்தை தொடும் பட்சத்தில் ஐசிசி தாமாகவே தடை விதிக்கும். அந்த வகையில் தங்களது நாட்டில் முதன்மை மைதானமாக திகழும் ராவல்பிண்டி இப்படி ஒரு நிலைமையை சந்தித்துள்ளது பாகிஸ்தான் வாரியத்திற்கு சிக்கலும் பின்னடைவும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இதர கிரிக்கெட் மைதானங்களையும் அந்நாட்டு வாரியம் உன்னிப்புடன் உருவாக்க வேண்டியது கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement