ஆஸ்திரேலியாவில் ஆஷெஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து 15வது வருடமாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது. 4வது போட்டியில் வென்ற இங்கிலாந்து ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்ததுடன் ஆஸ்திரேலியாவில் 15 வருடங்கள் 16 தொடர் தோல்விகளுக்குப் பின் ஒரு வழியாக வெற்றி பெற்று அசத்தியது.
முன்னதாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டி 2 நாட்களுக்குள் முடிந்தது சர்ச்சையை உண்டாக்கியது. அந்தளவுக்கு பெர்த் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் இருந்தது. இருப்பினும் அந்த மைதானத்தின் பிட்ச் நன்றாக இருந்ததாக போட்டியின் முடிவில் ஐசிசி ரேட்டிங் வழங்கியது இந்தியாவை சேர்ந்தவர்களை அதிருப்தியடைய வைத்தது.
கொட்டிய ஐசிசி:
ஏனெனில் கடந்த காலங்களில் இந்தியாவில் 3 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகளின் பிட்ச்களை சராசரி, திருப்தியற்றது என்ற மதிப்பீடுகளை ஐசிசி வழங்கியிருந்தது. அதே போல சொந்த மண்ணில் வெல்வதற்காக இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தார்கள். ஆனால் அன்று இந்தியாவை விமர்சித்தவர்கள் பெர்த் மைதானத்தின் ஆடுகளம் பற்றி பெரிதாக விமர்சிக்கவில்லை.
அந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 4வது போட்டியும் 2 நாட்களுக்குள் முடிந்தது. முதல் போட்டியில் வெறும் 32 விக்கெட்டுகள் இருந்த நிலையில் 4வது போட்டியில் 2 நாட்களுக்குள் 36 விக்கெட்டுகள் கொத்தாக விழுந்தன. அதனால் மெல்போர்ன் பிட்ச்சை இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.
ஐசிசி தண்டனை:
இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்ற 4வது போட்டியின் பிட்ச்சுக்கு “திருப்தியற்றது” என்ற ரேட்டிங்கை ஐசிசி ரேட்டிங் வழங்கியுள்ளது. அதனால் மெல்போர்ன் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக இல்லை என்று ஆஸ்திரேலியா வாரியத்தின் தலையில் ஐசிசி கொட்டியுள்ளது. அத்துடன் அதற்கு தண்டனையாக ஒரு குறைபாடு புள்ளியையும் ஐசிசி மெல்போர்ன் மைதானத்திற்கு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸி பிட்ச்சை நான் விமர்சிக்கல.. ஆனா இந்தியாவை பற்றிய டபுள் ஆக்சன் மட்டமானது.. அஸ்வின் பேட்டி
இது பற்றி ஐசிசி நடுவர் ஜெஃப் ஃக்ரோ கூறியுள்ளது பின்வருமாறு. “மெல்போர்ன் பிட்ச் பவுலர்களுக்கு அதிக சாதகமாக இருந்தது. முதல் நாளில் 20, இரண்டாவது நாளில் 16 விக்கெட்டுகள் விழுந்தது. எந்த பேட்ஸ்மானாலும் அரை சதம் கூட அடிக்கவில்லை. எனவே மைதான வழிகாட்டு விதிமுறைகளின் படி அது திருப்தியற்ற பிட்ச். அதற்காக மைதானம் ஒரு குறைபாடு புள்ளியைப் பெறுகிறது” என்று அறிவித்துள்ளார். இங்கே ஒரு மைதானம் 5 வருடத்தில் 6 குறைபாடு புள்ளிகளைப் பெறும் போது சர்வதேச போட்டிகளை நடத்த ஒரு வருடம் தடை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



