என்னையா பித்தலாட்டமா இருக்கு? அது அவுட் இல்ல சிக்ஸர் தான், ரசிகர்களின் விவாதத்துக்கு ஐசிசி கொடுத்த பதில் இதோ

Michel Neser Catch
Advertisement

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக்பேஷ் டி20 பிரீமியர் லீக் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 2023 ஜனவரி 1 புத்தாண்டில் காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் 224 ரன்கள் எடுத்த நிலையில் அதைத் துரத்திய சிட்னி முடிந்தளவுக்கு போராடிய போதிலும் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் அப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் நீசர் பிடித்த ஒரு கேட்ச் வர்ணனையாளர்களையும் ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியடைய வைத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

BBL Catch

ஏனெனில் அப்போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்து தனது அணியின் வெற்றிக்காக போராடிய சிட்னி வீரர் ஜோர்டான் சில்க் 19வது ஓவரின் முதல் பந்தை அதிரடியான சிக்ஸராக பறக்க விட்டார். நேராக லாங் ஆஃப் திசை நோக்கி பறந்த அந்த பந்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மைக்கேல் நீசர் தாவி பிடித்தாலும் பேலன்ஸ் செய்ய முடியாது என்பதை உணர்ந்து பந்தை காற்றில் தூக்கி எறிந்து விட்டு பவுண்டரிக்குள் சென்று 3 – 4 அடிகள் மெதுவாக ஓடினார். ஆச்சரியப்படும் வகையில் அவர் எறிந்த கோணத்திற்கு களத்திற்குள் செல்லாத பந்து அவரை நோக்கியே பவுண்டரிக்குள் வந்தது.

- Advertisement -

ஐசிசி விளக்கம்:
அப்போது கீழே வந்து கொண்டிருந்த பந்தை ஒரு காலில் தாவியவாறு மற்றொரு காலையும் தரையிலிருந்து எடுத்த அவர் அரை நொடி பொழுதுக்குள் பந்தை பிடித்து மீண்டும் களத்திற்குள் இருக்குமாறு காற்றில் தூக்கி போட்டார். அதன் பின் மீண்டும் களத்திற்குள் வந்து பந்தை பிடித்த அவர் கேட்ச் கேட்டதால் களத்தில் இருந்த நடுவர்கள் 3வது நடுவரை நாடினார்கள். அதை ஒன்றுக்கு 2 முறை சோதித்து பார்த்த நடுவர் பவுண்டரிக்குள் இருந்தாலும் பந்தை பிடிக்கும் போது அவரது கால்கள் தரையில் படாத காரணத்தால் அவுட் கொடுத்தார்.

அதனால் பேட்ஸ்மேன் அதிர்ச்சியானது போலவே ஆடம் கிறிஸ்ட், சைமன் டௌல் போன்ற முன்னாள் வீரர்கள் அடங்கிய வர்ணணையாளர்கள் குழுவும் அதிர்ச்சியடைந்தது. இது தாங்கள் பார்த்ததிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய அவுட் என்றும் அவர்கள் அதிருப்தியை தெரிவித்தார்கள். மேலும் அதை சமூக வலைதளங்களில் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் பவுண்டரிக்குள் இருந்து பிடித்ததால் அது நிச்சயம் அவுட் கிடையாது சிக்ஸர் தான் என்று காரசாரமாக விவாதித்து வருகிறார்கள். அப்படி அடிப்படை விதிமுறையை மிஞ்சிய சாதுரியம் உலக அளவில் ஏற்பட்ட விவாதம் ஐசிசி கவனத்திற்கும் சென்றது.

- Advertisement -

இந்நிலையில் அடிப்படை விதிமுறைப்படி அந்த சமயத்தில் நடுவர் அவுட் கொடுத்தது சரிதான் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அதற்காக தனி அறிக்கையை விட்டுள்ள ஐசிசி முதலில் அது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அடிப்படை விதிமுறையை சுட்டிக்காட்டியுள்ளது பின்வருமாறு. “விதிமுறை 19.5.2 சொல்வது என்னவென்றால் மைதானத்துடன் தொடர்பில்லாத ஒரு ஃபீல்டர், பந்து வீச்சாளரால் பந்து வீசப்பட்ட பின்னர் அவரது/அவளின் முதல் தொடர்புக்கு முன் மைதானத்துடனான அவரது/அவளது இறுதித் தொடர்பை முழுவதுமாக இல்லாதிருந்தால், எல்லைக்கு அப்பால் தரையிறக்கப்பட்டதாகக் கருதப்படுவார்”

அதை தெளிவுபடுத்தி ஐசிசி கூறும் காரணம் பின்வருமாறு. “ஃபீல்டரின் முதல் தொடுதல் பந்தின் எல்லைக் கோட்டிற்குள் இருக்கும் வரை அவர்கள் விரும்பியபடி கேட்ச்சை முடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் கால்கள் எல்லைக்கு மேல் பந்துடன் தரையிறங்காமல் இருந்தால் மட்டுமே கவனிக்க வேண்டியது அவசியம். அந்த இடத்தில் பந்துடனான நீசரின் ஆரம்ப தொடர்பு, அவர் குதித்த நேரம் மற்றும் இறுதியில் பிடித்த கேட்ச் ஆகிய அனைத்தும் ஆட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டவை என்பதால் பேட்ஸ்மேன் சரியாக அவுட் என்று அறிவிக்கப்பட்டது” என்று கூறியுள்ளது.

இதையும் படிங்கநீங்க சொன்ன கேட்கணுமா? அதெல்லாம் முடியாது – பிசிசிஐ முடிவை எதிர்க்க தயாராகும் ஐபிஎல் அணிகள், அதிரடி அறிவிப்பு

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் பவுண்டரியை கடந்து பவுண்டரிக்குள் இருந்தாலும் பந்தை பிடிக்கும் போது அவருடைய கால்கள் தரையை தொடாத காரணத்தால் விதிமுறைப்படி அது சிக்ஸர் அல்ல அவுட் தான் என்று கூறியுள்ள ஐசிசி ரசிகர்களின் குழப்பத்தை தெளிவாக்கி இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Advertisement