IND vs AUS : பந்தை சேதப்படுத்தல ஆனா – ரவீந்திர ஜடேஜாவுக்கு 2 அதிரடி தண்டனை வழங்கிய ஐசிசி, காரணம் என்ன

Jadeja-and-Siraj
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் எண்ணத்துடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியுள்ளது. அந்த நிலைமையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கியை தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான சுழல் பந்து வீச்சில் வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்கள் எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதே சுழலுக்கு சாதகமான மைதானத்தில் நல்ல லைன், லென்த் போன்ற வேரியேஷன்களை பயன்படுத்தாமல் சுமாராக பந்து வீசிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக எதிர்கொண்டு 400 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 120 ரன்களும் அக்சர் படேல் 84 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அறிமுக போட்டியிலேயே அசத்திய டோட் முர்பி 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ஐசிசி அதிரடி:
அதைத் தொடர்ந்து 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் 5 விக்கெட்கள் சாய்த்தார். அதனால் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை 3 நாட்களில் சுருட்டி சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் மொத்தமாக 7 விக்கெட்டுகள், 70 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்று தன்னை நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து மிகச் சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். இருப்பினும் இப்போட்டியின் முதல் நாளில் முகமது சிராஜ் கொண்டுவந்த கொடுத்த ஏதோ ஒரு பொருளை தொட்டு பந்து வீசும் தனது விரல்களில் தடவிக் கொண்ட ரவீந்திர ஜடேஜா பந்தை இறுக்கமாக பிடித்து வீசுவதற்காக மர்ம பொருளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தி சீட்டிங் செய்ததாக மைக்கல் வாகன், டிம் பைன் போன்றவர்கள் வீடியோ ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

- Advertisement -

இருப்பினும் அதிக நேரம் பந்தை இறுக்கமாக பிடித்து வீசியதால் ஏற்பட்ட வலியை குறைப்பதற்காக வலி நிவாரணியை தான் ரவீந்திர ஜடேஜா பயன்படுத்தியதாக அந்த நாளின் முடிவில் போட்டி நடுவரிடம் இந்திய அணி நிர்வாகம் நேரடியாக விளக்கியது. அந்த தருணத்தில் அதை தனது விரல்களில் ஜடேஜா பயன்படுத்தினாரே தவிர பந்தை தேய்ப்பதற்காக பயன்படுத்தவில்லை என்பதால் நடுவரும் அதை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் அந்த சமயத்தில் வலி நிவாரணியை பயன்படுத்தியதற்காக ரவீந்திர ஜடேஜாவுக்கு இப்போட்டியின் சம்பளத்திலிருந்து 25% அபராதம் விதிக்கப்படுவதாகவும் அவரது கேரியரின் நன்னடத்தையில் ஒரு கருப்பு புள்ளி சேர்க்கப்படுவதாகவும் ஐசிசி அதிரடியான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால் பந்தை சேதப்படுத்தாத போதும் இந்த தண்டனை ஏன் என்று இந்திய ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரவீந்திர ஜடேஜா தன்னிச்சையாக உதவி பெற்ற 2.20 விதிமுறை மீறியுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. அதாவது அந்த சமயத்தில் பந்தை சேதப்படுத்தவில்லை என்றாலும் வலி நிவாரணி தேவைப்பட்டால் அதை முதலில் போட்டி நடுவரிடம் சொல்லிவிட்டு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதிமுறையாகும். மாறாக நடுவரின் அனுமதியின்றி தன்னிச்சையாக செயல்பட்டதால் ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.

இதையும் படிங்க: அவர வெச்சுகிட்டே அவரோட தப்ப சரி பண்ணிட்டீங்க ரோஹித், நீங்க கிரேட் டெஸ்ட் பேட்ஸ்மேன் தான் – இயன் சேப்பல் பாராட்டு

மேலும் 41.3 விதிமுறைப்படி பந்தை சேதப்படுத்தும் நோக்கத்தில் பந்தின் மீது அவர் எதையும் பயன்படுத்தவில்லை என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. மொத்தத்தில் நடுவரின் அனுமதி இல்லாமல் வலி நிவாரணையை பயன்படுத்தியதற்காக ஜடேஜாவுக்கு தண்டனை கொடுத்துள்ள ஐசிசியை பார்க்கும் இந்திய ரசிகர்கள் “என்னதான் இருந்தாலும் கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுப்பா” என்று கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement