இந்தியா போராடி பெற்ற வெற்றியை தோல்வி என அறிவித்த ஐசிசி, குழம்பிய ரசிகர்கள் – என்ன நடந்தது?

IND-Womens
- Advertisement -

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற உலகின் டாப் 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று மற்றும் பைனல் உட்பட மொத்தம் 31 போட்டிகள் நடைபெறும் இந்த உலக கோப்பை வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நியூசிலாந்தில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் சுமார் ஒரு மாதம் நடைபெற உள்ளது.

இந்த உலக கோப்பையில் பங்கேற்க அனுபவ நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி கடந்த மாதமே அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. குறிப்பாக இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வண்ணம் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4 – 1 என்ற கணக்கில் இந்திய அணியினர் தோல்வி அடைந்தனர்.

- Advertisement -

பயிற்சி போட்டி:
அந்த வேளையில் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி எடுக்கும் வண்ணம் ஐசிசி உலகக்கோப்பை 2022 தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இன்று நியூசிலாந்தில் துவங்கியது. இன்று 3 போட்டிகள் நடந்த நிலையில் இந்தியா தனது முதல் பயிற்சி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை சந்தித்தது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்ததை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த இந்தியா 244 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 114 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்து 103 ரன்கள் விளாசி நீண்ட நாட்கள் கழித்து ஓரளவுக்கு பார்முக்கு திரும்பினார். அவருடன் யாஷிடிகா பாட்டியா 58 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியா போராடி வெற்றி உளறிய ஐசிசி:
இதை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீராங்கனை பிரிட்ஸ் டக் அவுட்டானர். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை லாரா 75 ரன்கள் எடுக்க மிடில் ஆர்டரில் அசத்திய சுனி லுஸ் 94 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றார். இருப்பினும் கடைசி நேரத்தில் சிறப்பாக வீசிய இந்திய வீராங்கனைகள் அந்த அணியை மடக்கி பிடித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் காரணமாக கடைசி கட்ட பரபரப்பான நேரத்தில் வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியது. ஆனால் இந்தப் போட்டியைப் பற்றி தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் அப்டேட் கொடுத்துக் கொண்டிருந்த ஐசிசி முதலில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தது. அதற்கு ஜோடியாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய டுவிட்டர் பக்கத்திலும் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போதாக்குறைக்கு பிரபல கிரிக்கெட் இணைய தளங்களான கிரிக்பஸ் மற்றும் இஎஸ்பிஎன்கிரிக்இன்போ ஆகிய இணையதளங்களிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.

- Advertisement -

இதை பார்த்த பல ரசிகர்கள் குழப்பமடைந்த வேளையில் ஒரு சில ரசிகர்கள் இந்த போட்டியின் ஒரிஜினல் ஸ்கோர்கார்ட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஐசிசி மற்றும் இதர இணைய தளங்களை கலாய்க்க தொடங்கினார்கள். மேலும் அந்த போடியில் விளையாடிய இந்திய வீராங்கனை யாஷ்டிகா பாட்டியாவும் இது தவறு என சுட்டிக்காட்டியிருந்தார். அதனால் தவறை உணர்ந்த ஐசிசி மற்றும் இதர கிரிக்கெட் பக்கங்கள் அவசர அவசரமாக இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தங்களது செய்தியை மாற்றின.

இதையும் படிங்க : வெறும் 3 பேட்ஸ்மேன்கள் உடன் மட்டுமே களமிறங்கியுள்ள இந்திய அணி – இதை நோட் பண்ணீங்களா?

பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் வேலைகளில் ஈடுபடுவதால் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்க்க முடியாமல் ஐசிசி மற்றும் இதரப் லைவ் ஸ்கோர் பக்கங்கள் அளிக்கும் லைவ் ஸ்கோர்களை எப்போதும் பின் தொடர்ந்து வெற்றி தோல்வி பற்றி தெரிந்து கொள்வார்கள். ஆனால் ஐசிசி உள்ளிட்ட இதுபோன்ற அதிகாரபூர்வ பக்கங்களே இப்படி மிகப்பெரிய தவறை செய்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement