நியாயத்தையும் நம்பிக்கையையும் இந்தியாவிடம் எதிர்பார்க்கக் கூடாது – ஸ்மித், கவாஜாவை தொடர்ந்து இயன் ஹீலி நேரடி தாக்கு

ian healy virat kohli
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் நாக்பூரில் கோலாகலமாக துவங்குகிறது. வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் தோல்வி பரிசளித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.

AUs vs IND

- Advertisement -

பொதுவாக இந்தியாவில் இயற்கையாகவே ஓரிரு நாட்களுக்கு பின் அனைத்து மைதானங்களிலும் சுழல் பந்து வீச்சு அதிகமாக எடுபடும் என்பதால் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. முன்னதாக கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய மண்ணில் விளையாடிய போது அதற்காக ஆரம்பத்தில் பயிற்சி எடுப்பதற்கு பச்சை நிற புற்கள் நிறைந்த பிட்ச்கள் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் முதன்மையான டெஸ்ட் போட்டிகளில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்ததாகவும் அப்போது கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இயன் ஹீலி விமர்சனம்:
அதையே இம்மாத துவக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவஜா தெரிவித்தது பின்வருமாறு. “அங்கே முதன்மையான போட்டிகளில் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும். ஆனால் பயிற்சி போட்டிகளில் காபா போல பச்சை புற்கள் நிறைந்த ஆடுகளத்தை கொடுத்தால் பின்னர் அதனால் என்ன பயன்” என்று கூறியிருந்தார். அதனாலேயே இம்முறை எந்த பயிற்சி போட்டியிலும் களமிறங்காமல் நேரடியாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.

Steve Smith Virat Kohli IND vs AUS

மேலும் இந்தியாவில் பயிற்சி போட்டிகளில் நியாயமான ஆடுகளங்கள் இருக்காது என்பதால் சிட்னியில் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வரும் புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் முன்னாள் வீரர் இயன் ஹீலி இந்தியாவில் நம்பிக்கையும் நியாயத்தையும் எதிர்பார்த்து செல்லக்கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி சென் ரேடியோவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் எங்களுடைய ஸ்பின்னர்களை சிட்னியில் ஒருங்கிணைத்து இந்தியாவில் இருக்கும் ஆடுகளங்களை பற்றி பேசி வருகிறோம். ஏனெனில் இனிமேலும் இந்தியாவில் நாங்கள் கோரிக்கை வைக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை. ஆனால் இங்கிலாந்துக்கு செல்லும் போது கூட நாங்கள் கவுண்ட்டி அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறோம். அந்த வகையில் நாங்கள் எந்த ஒரு தொடருக்கும் எங்களது இளம் வீரர்கள் தரமாக தயாராவதை உறுதி செய்கிறோம்”

Shane Warne Ian Healy

“ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் நாங்கள் தரமாக தயாராகவதற்கான வசதிகள் கிடைக்காமல் மறுக்கப்பட்டுள்ளோம். இது எனக்கு பிடிக்கவில்லை. இரு நாடுகளுக்கிடையே இது போன்ற நம்பிக்கையற்ற தன்மை இருப்பது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவுக்கு பயணிக்கும் அனைத்து அணிகளும் தடுமாறுவதை நாம் பார்த்து வருகிறோம். அது மீண்டும் நடைபெறப்போகிறது. ஆனால் இம்முறை நாங்கள் இந்திய மண்ணில் பயிற்சிகளை செய்யாமலேயே இந்தியாவுக்கு சென்று விளையாட உள்ளோம்”

- Advertisement -

“மேலும் இந்த தொடரில் இந்திய மண்ணில் அனைத்தும் சரியாக வேலை செய்யும் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய அணியினர் புத்துணர்ச்சியுடன் வலைப்பயிற்சி மட்டுமே செய்யப் போகிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய பயிற்சியாளர்கள் உதவி செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். இருப்பினும் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கு இடையே ஒரு பயிற்சி போட்டி இருப்பதை நான் விரும்புகிறேன். குறிப்பாக 3 நாட்கள் பயிற்சி போட்டி நடந்தால் 18 வீரர்களில் எஞ்சியுள்ள 7 வீரர்கள் தயாராக நல்ல வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: லக்னோ மைதானத்தின் தன்மை குறித்து பேசிய பாண்டியாவிற்கு ரிப்ளை கொடுத்த – சூரியகுமார் யாதவ்

இப்படி இந்தியா மீது மொத்த பழியையும் போடும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் இந்த சமயத்தில் தங்களது நாட்டில் பிக்பேஷ் லீக் நடைபெறுவதையும் அதில் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் விளையாடுவதையும் மறந்து விட்டார்களா என்பது இந்திய ரசிகர்களுக்கு கேள்விக்குறியாகிறது. ஏனெனில் நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்கள் அதில் முழுமையாக விளையாடுவதன் காரணமாகவே இந்தியாவில் பயிற்சி போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய வாரியமும் அட்டவணையில் நேரத்தை கேட்கவில்லை இந்தியாவும் அதை ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement