கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக, அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடையும் விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். அதனைத் தொடரந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநடத்தும் பொறுப்பு டிம் பெய்னிற்கு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவிற்கு எதிராக 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா அணி படுதோல்வி அடைந்ததால், டிம் பெய்னின் கேப்டன்சியின்மீது பல்வேறு வித விமர்ச்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர், இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் உலக கோப்பைக்கு தொடருக்கு இணையாக இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை கருதி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் மோசமான கேப்டன்சியை வெளிப்படுத்தி வரும், டிம் பெய்னை வைத்துக்கொண்டு இத்தொடரை கைக்பற்ற முடியாது என்பதால், டிம் பெய்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக்கும் முடிவில் இருக்கிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். இதைப் பற்றி இதற்கு முன்பு பேட்டியளித்திருந்த டிம் பெய்ன், எனக்குப் பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு ஸ்டீவ் ஸ்மித்திற்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
டிம் பெய்னே இப்படி கூறியிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் கருத்து ஒன்று கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நமது அணி இப்போது முன்னேறிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் அதற்கான முடிவை எடுக்காமல், நீங்கள் ஸ்டீவ் ஸ்மித்திற்கே மீண்டும் கேப்டன் பொறுப்பை வழங்கும் முடிவை எடுத்தால், அது நமது அணியை பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கு சமாமாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டனாக இருக்கும் பேட் கம்மின்ஸுக்குதான் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு செல்ல அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும், சில நாட்களுக்கு முன் பந்தை சேதப்படுத்திய விவகரத்தில் பேன்கிராஃப்ட் அளித்த பேட்டியால், பேட் கம்மின்ஸும் விசாரணை வளையத்திற்குள் வருவார் என்று எதிர்பர்க்கப்படுகிறது. இது குறித்தும் கருத்து தெரிவித்த இயான் சேப்பல், ஒருவேளை பேட் கம்மின்சுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டால், அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதனை நான் சொல்வதற்காக, பேட் கம்மின்சுக்கு எதிராக பேசுகிறேன் என்று அர்த்தம் இல்லை.
அந்த குற்றத்தை அப்போதைய கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. கம்மின்சுக்கு இதைப் பற்றி தெரிந்திருந்தாலும், குற்றத்திற்கான முழுப் பொறுப்பும் ஸ்டீவ் ஸ்மித்தையே சேரும் என்று அவர் கூறினார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் விசாரிக்க இருப்பதால், பேட் கம்மின்ஸுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், எதிர்வரும் ஆஷஸ் தொடரை கருத்தில்கொண்டு அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.