கங்குலி, தோனி வழியில் இந்திய கிரிக்கெட்டின் மரபை உயர்த்தியவர் இவர்தான் – இயான் சேப்பல் பாராட்டு

Chappell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து முதலில் விலகிய விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதில் ஏற்பட்ட மன விரக்தி காரணமாகவே வெற்றிகரமாக இருந்த போதிலும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகிவிட்டார் என பரவலாக நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே கடந்த 2 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர் இனி தமது பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக அவரே தெரிவித்துள்ளார். கேப்டனாக அவர் ஒரு உலகக்கோப்பையை வெல்லவில்லை என்றாலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் பல மைல்கள் வெற்றிகளை இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்து விடை பெற்றுள்ளார்.

- Advertisement -

மோசமான கேப்டன் இல்லை :
உலககோப்பை என்பதை தாண்டி பார்க்கும் போது விராட் கோலி தலைமையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் மற்ற ஜாம்பவான் கேப்டன்களை காட்டிலும் அவர் தலைமையில் இந்தியா அதிக சராசரி விகிதத்தில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 90களின் இறுதியில் சூதாட்ட புகாரில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி பல அதிரடி மாற்றங்களை செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து உலகத்தரம் வாய்ந்த இந்திய அணியை உருவாக்கினார்.

கங்குலியால் ஒரு உலகக்கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்றாலும் அவர் அளவுக்கு ஒரு கேப்டன் கிடைப்பாரா என அப்போது இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த நேரத்தில் யாரும் எதிர்பாரா வண்ணம் தங்கமாக கிடைத்த எம்எஸ் தோனி கங்குலியால் முடியாத பல வெற்றிகளை அவர் உருவாக்கிய அணியை வைத்துக்கொண்டு சாத்தியப்படுத்தி 3 வகையான உலகக்கோப்பைகளை வென்று கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

kohli

கங்குலி, தோனி வழியில் :
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட்டை வழிநடத்திய சவுரவ் கங்குலி – எம்எஸ் தோனிக்கு பின் நீண்ட காலமாக இந்தியாவிற்கு கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி அவர்களைப்போலவே இந்தியாவை வழி நடத்தியதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் இயான் சேப்பல் பாராட்டியுள்ளார். இதுபற்றி இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் அவர்,

- Advertisement -

“விராட் கோலி ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவர் அவரின் ஆர்வத்தை எப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. இருப்பினும் அவரால் இந்திய கிரிக்கெட்டை மிக உயர்ந்த அளவில் வழிநடத்த முடிந்தது. அஜிங்கிய ரஹானே போன்ற துணை கேப்டன்களின் உதவியுடன் அவரால் மற்ற எந்த இந்திய கேப்டன்களாலும் முடியாத அளவுக்கு வெளிநாடுகளில் வெற்றிகளை குவிக்க முடிந்தது. சௌரவ் கங்குலி மற்றும் தோனி ஆகியோரின் மரபை அப்படியே பின்பற்றிய விராட் கோலி கடந்த 7 வருடங்களில் கணிசமான அளவு தனது பங்களிப்பையும் சேர்த்துள்ளார்.

Kohli-1

தென்ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்று 1 – 0 என முன்னிலை வகித்த போதும் அந்த டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆனால் அவர் அந்த தொடரின் பாதியில் காயத்தால் விலக நேரிட்டது” என குறிப்பிட்டுள்ள இயன் சேப்பல் சவுரவ் கங்குலி, தோனி ஆகியோரின் வழியில் இந்திய கிரிக்கெட்டை விராட் கோலி மிகச்சிறப்பாக வழி நடத்தினார் என கூறியுள்ளார்.

- Advertisement -

டெஸ்டில் கிங் :
டெஸ்ட் கிரிக்கெட்டில் கங்குலி மற்றும் தோனியை விட பல சாதனைகளை படைத்த விராட் கோலி பற்றி அவர் மேலும் பேசுகையில், “டெஸ்ட் போட்டியை வென்றே தீர வேண்டும் என்ற மனநிலையை இந்திய அணியில் கொண்டுவந்தது விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையாகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியான வெற்றிகளை பெற வேண்டும் என்பதே அவரின் மிகப்பெரிய லட்சியமாக இருந்தது. விராட் கோலியின் பெயரில் பல சாதனைகள் இருக்கலாம். இருப்பினும் ரிஷப் பண்ட் எனும் விக்கெட் கீப்பர் பேட்டரை வளர்த்தது அவரின் மிகப்பெரிய சாதனையாகும்.

kohli

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்த சில முடிவுகள் கேள்விக்குரியதாக இருந்திருக்கலாம். ஆனால் ரிஷப் பண்ட்க்கு அவர் ஆதரவளித்த முடிவு ஒரு மகத்தான முடிவாகும்” என கூறியுள்ள அவர் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்காற்றிய விராட் கோலியை மனதார பாராட்டியுள்ளார். அத்துடன் விராட் கோலி தலைமையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எதிரணிக்கு அசாத்தியமான ஒன்றாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் புதிதாக 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு

மேலும் விராட் கோலியின் காலத்தில் இங்கிலாந்துக்கு கேப்டன்ஷிப் செய்து வரும் ஜோ ரூட் ஒரு மிகச்சிறந்த பேட்டர் எனவும் ஆனால் ஒரு மோசமான கேப்டன் எனவும் இயன் சேப்பல் விமர்சித்துள்ளார். இதிலிருந்தே விராட் கோலி ஒரு உலகக்கோப்பையை வென்று தராவிட்டாலும் ஒரு மிகச் சிறந்த கேப்டன் என்பது நிரூபணமாகிறது.

Advertisement