எப்போவுமே விராட் கோலி மகத்தான சச்சினுக்கு கீழே தான், வேணும்னா மியாண்தத்துடன் கம்பேர் பண்ணலாம் – வெ.இ ஜாம்பவான் பாராட்டு

Sachin Tendulkar VIrat kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் முடிவில் 288/4 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அப்போட்டியிலும் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும் ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் சுப்மன் கில் 10 ரன்களிலும் ரகானே 8 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

Kohli wi keeper

- Advertisement -

இருப்பினும் அடுத்ததாக களமிறங்கி தன்னுடைய தரத்திற்கு நிகரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 87* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 36* ரன்களும் எடுத்து இந்தியாவை வலுப்படுத்தி வருகின்றனர். முன்னதாக இந்த போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி ஆகியோருக்குப் பின் படைத்த விராட் கோலி உலக அளவில் 10வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அதை விட உலகிலேயே 500 போட்டிகளில் முடிவில் அதிக ரன்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட ஒரே வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளையும் அவர் படைத்தார்.

சச்சினுக்கு கிழே தான்:
அதை விட 87* ரன்கள் எடுத்துள்ள அவர் உலகிலேயே தன்னுடைய 500வது சர்வதேச போட்டியில் அரை சதமடித்த முதல் வீரர் என்ற மற்றொரு உலக சாதனை படைத்து அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறார். முன்னதாக ஏற்கனவே 75 சதங்களை அடித்து சச்சினையே மிஞ்சி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்கள் ஒட்டுமொத்த அளவில் அதிவேகமாக 25000 ரன்கள் போன்ற நிறைய சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி தான் வரலாற்றின் மகத்தான வீரர் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆனாலும் உள்வட்டத்திற்கு வெளியே அதிகமான ஃபீல்டர்கள் இருந்த அந்த காலத்தில் முரளிதரன், வார்னே, மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஏராளமான உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்ட சச்சின் தான் எப்போதும் ஆல் டைம் கிரேட் என்று கெளதம் கம்பீர் போன்றவர்கள் மற்றொருபுறம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் இந்தியா என்றாலே சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் மகத்தானவர் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் தம்மைப் பொறுத்த வரை சச்சினுக்கு சற்று கீழே இருக்கும் விராட் கோலி பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத்துக்கு நிகரான தரத்தை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு இந்திய ஜாம்பவான் என்ற முறையில் நான் அவரை சச்சினுக்கு பின்னால் தான் மதிப்பிடுவேன். ஏனெனில் நான் பார்த்து மற்றும் எதிராக விளையாடிய சிறந்த வீரர்களில் சச்சினும் ஒருவர். வெஸ்ட் இண்டீஸ் கண்ணோட்டத்தில் பிரையன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் மகத்தானவர்கள்”

“அதே போல ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோரும் அவர்கள் வரிசையில் இருப்பார்கள். அத்துடன் நான் இளம் வீரராக இருந்த போது கிராகம் கூச், ஜாவேத் மியாண்தத் ஆகியோர் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்கள் தங்களுடைய விக்கெட்டுக்கு கொடுத்த மதிப்பு தற்போது எனக்கு விராட் கோலி நினைவுப்படுத்துகிறது. ஏனெனில் அவர் எளிதில் வெளியே செல்ல விரும்பவில்லை. அந்த வகையில் நான் பார்த்த 4 – 5 மகத்தான வீரர்களில் அவரையும் ஒருவராக வைத்திருப்பேன்”

இதையும் படிங்க:எங்க அம்மா உங்க பேட்டிங்கை பாக்க கிரவுண்டுக்கு வராங்க. ப்ளீஸ் எனக்காக அதை பண்ணுங்க – கோலியிடம் வெ.இ கீப்பர் வேண்டுகோள்

“மிகவும் ஆர்வத்துடன் இருக்கும் அவர் இந்த விளையாட்டில் தனக்கான அடையாளத்தை விட்டுச் செல்ல விரும்புகிறார். மேலும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் செலெக்டராக இருந்த போது இந்தியாவின் கேப்டனாக இருந்த அவரிடம் பேசினேன். அப்போது சிறந்தவராக இருக்க விரும்பும் வகையில் பேசிய அவர் எதிரணிக்கும் ஆலோசனை கொடுக்க தயாராக இருந்தார். அந்த வகையில் அவருடைய சாதனைகளை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. ஆனால் அவருடைய ஆர்வமே அவரை டாப் 3 – 5 வீரர்கள் பட்டியலில் இருக்க வைக்கிறது” என்று கூறினார்.

Advertisement