வீடியோ : இன்னைக்கு வெட்டும் கேக்கை விட அந்த கேக்கை வெட்டுவதே எனது லட்சியம் – பிறந்தநாளில் விராட் கோலி சபதம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதியன்று ஜிம்பாபேவுக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்று அரையிறுதிக்குள் நுழைய தயாராகும் இந்தியா அப்போட்டி நடைபெறும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் இந்த வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே கூறலாம்.

அதிலும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பிய அவர் அதே புத்துணர்ச்சியுடன் இந்த உலகக் கோப்பையில் சக்கை போடு போட்டு அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக (220*) சாதனை படைத்து வருகிறார். மேலும் ஒட்டுமொத்த டி20 உலக கோப்பை வரலாற்றிலும் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ள அவர் அதிக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் வென்ற வீரர், அதிக அரை சதங்கள் மற்றும் சராசரியை கொண்ட பேட்ஸ்மேன் போன்ற எட்ட முடியாத உலக சாதனைகளையும் படைத்தார்.

- Advertisement -

லட்சிய கேக்:
அப்படி அட்டகாசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி சாதனைகளை படைத்து வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து வரும் அவர் நவம்பர் 5ஆம் தேதியன்று தன்னுடைய 34வது பிறந்த நாளை கொண்டாடினார். டெல்லியில் பிறந்து கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி கடந்த 15 வருடங்களில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் 24000+ ரன்களையும் 71 சதங்களையும் விளாசி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து 34 வயதிலேயே தன்னை ஜாம்பவானாக நிரூபித்து வருகிறார்.

இருப்பினும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் வீழ்ச்சியை சந்தித்த அவரை இந்த உலகக் கோப்பையிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் நன்றியை மறந்து விமர்சித்தார்கள். ஆனால் அதற்காக அசராமல் கடினமாக உழைத்து பார்முக்கு திரும்பி அதே முன்னாள் வீரர்கள் கைதட்டி பாராட்ட வைத்த அவருடைய பிறந்தநாள் இந்திய அணி நிர்வாகம் சார்பில் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சக வீரர்களின் பாராட்டுகளுக்கு மத்தியில் இதே நாளன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணியின் மனநல பயிற்சியாளர் ஃபேடி அப்டோனுடன் இணைந்து கேக் வேட்டிய விராட் கோலி பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

- Advertisement -

அதன்பின் நாளைய போட்டியில் வெற்றி பெறுவதற்காக மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சிகளை செய்து கொண்டிருந்த அவரை ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய பத்திரிக்கையாளர்கள் தங்களது சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவுக்கு வருகை தருமாறு அழைத்தனர். அதை ஏற்று மைதானத்தின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த விராட் கோலிக்கு இந்திய பத்திரிகையாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது ஒரு பத்திரிகையாளர் கொடுத்த சிறப்பு பரிசைப் பார்த்து ஆச்சரியமடைந்த விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் கேக் வெட்ட சொன்னார்கள். அப்போது இந்த கேக்கை வெட்டுகிறேன் ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் காத்திருக்கும் மற்றொரு கேக்கை வெட்டுவது தான் என்னுடைய லட்சியம் என்று சொல்லிக் கொண்டே விராட் கோலி கேக்கை வெட்டினார். அதாவது அடுத்த வாரம் இதே மைதானத்தில் தான் இந்த உலகக் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் இந்தியாவை அழைத்துச் சென்று கோப்பையை வென்று கொடுப்பதேதம்மைப் பொறுத்தவரை இன்று வெட்டும் கேக்கை விட இனிமையானது என்று விராட் கோலி கூறினார். அதைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்த இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement