டி20 கிரிக்கெட்டில் கழற்றி விடப்படுவதால் ஓய்வு பெறுகிறீர்களா? கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த நேரடி பதில் இதோ

Rohit-Sharma
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதியன்று நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடக்கும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட சீனியர் நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை அணி களமிறங்குகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

- Advertisement -

அதனால் கடுப்பான ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்த பிசிசிஐ 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை களமிறக்கும் வேலைகளை ஏற்கனவே மறைமுகமாக துவங்கியுள்ளது. அதனாலேயே 2023 புத்தாண்டில் முதலாவதாக நடைபெற்ற இலங்கை எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் கழற்றி விடப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் ஏராளமான இளம் வீரர்கள் விளையாடினார்கள். அதனால் சீனியர் வீரர்களின் டி20 கேரியர் முடிந்ததாகவே கருதப்படுகிறது.

அவ்ளோ சீக்கிரம் விடமாட்டேன்:
குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஹிட்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடுவதற்கேற்ப அதிரடியாக விளையாட முடியாமல் திண்டாடும் ரோஹித் சர்மா சரியான உடல் தகுதியை பின்பற்றாமல் அடிக்கடி காயமடைவதை வழக்கமாக வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக 2022 சீசனில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடிய அவர் 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் 2012க்குப்பின் முதல் முறையாக ஒரு சதத்தை கூட அடிக்க முடியாமல் மோசமாக செயல்பட்டு வருகிறார். அதனாலேயே கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் 36 வயதை கடந்து விட்டதால் இனிமேலும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Rohit Sharma IND

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது பற்றி தற்போது முடிவெடுக்கவில்லை என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா 2023 ஐபிஎல் தொடரில் தமது செயல்பாடுகளை வைத்து அதை பற்றி பின்னர் யோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே 2023 உலக கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கும் அவர் 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் ஒருநாள் போட்டிக்கு பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த வருடம் உலகக் கோப்பை வருடம் என்பது ஏற்கனவே நமக்கு தெளிவாக தெரியும். மேலும் சில வீரர்களுக்கும் இந்த 50 ஓவர் உலகக்கோப்பை முக்கியமாகும். எனவே அனைத்து வீரர்களும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது அசாத்தியமாகும். அதே சமயம் அட்டவணையை நீங்கள் பார்க்கும் போது நமக்கு தொடர்ந்து அடுத்தடுத்து போட்டிகள் உள்ளது. எனவே நாங்கள் சில முக்கிய வீரர்களுக்கு பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ளோம். அதனால் அவர்களுக்கு தேவையான ஓய்வு கொடுத்து நிர்வகிக்க வேண்டியுள்ளது. நானும் அந்த பட்டியலில் தான் உள்ளேன்”

Rohit

“இந்த வருடம் நமக்கு 6 டி20 போட்டிகள் மட்டுமே உள்ளது. அதில் ஏற்கனவே 3 முடிந்து விட்டது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் உள்ளது. எனவே ஐபிஎல் வரை நாங்கள் பார்த்துக் கொள்வோம். குறிப்பாக என்னை பொறுத்த வரை ஐபிஎல் தொடருக்கு பின் என்ன நடக்கும் என்று பார்ப்போம். ஆனால் நிச்சயமாக தற்போதைக்கு நான் டி20 கிரிக்கெட்டை விட்டுவிடவில்லை. மேலும் கேப்டன்ஷிப் பற்றியும் இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை”

இதையும் படிங்க: ஏலத்திற்கு முன்னாடி இலங்கை தொடர் மட்டும் நடந்து இருந்தா. அவரு பல கோடிக்கு போயிருப்பாரு – கம்பீர் ஓபன்டாக்

“தற்போதைய நிலைமையில் அனைவரும் 2023 உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். எனவே அடுத்த கேப்டன் யார் என்பதை வருங்காலம் மட்டுமே பதில் சொல்லும். அதுவரை நீங்கள் காத்திருங்கள்” என்று கூறினார். இருப்பினும் ஏற்கனவே துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா வரும் காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்பார் என்று நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement