
மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதின. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கி மிகுந்த பரபரப்பாக நடந்த அப்போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை பதம்பார்த்த பெங்களூரு அபார வெற்றி பெற்றது. அதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி வெற்றி நடைபோடுகிறது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி அதிரடியாக 189/5 ரன்கள் குவித்தது. ஏனெனில் அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டு ப்லேசிஸ் 8 (11), அனுஜ் ராவத் 0 (1), விராட் கோலி 12 (14) போன்ற முக்கிய வீரர்கள் சொதப்பிய நிலையில் அடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 55 (34) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த இளம் வீரர் பிரபுதேசாய் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
மிரட்டிய கார்த்திக்:
அதனால் 92/5 என தடுமாறிய பெங்களூருவுக்கு அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் இருந்தே அதுவரை சிறப்பாக பந்து வீசிய டெல்லி பவுலர்களை சரமாரியாக அடித்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற இளம் வீரர் ஷபாஸ் அஹமத் தனது பங்கிற்கு அதிரடியாக 21 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 32* ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்த தினேஷ் கார்த்திக் சரவெடியாக பேட்டிங் செய்து குறிப்பாக வங்கதேச பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய ஒரே ஓவரில் 4, 4, 4, 6, 6, 4 என 28 ரன்களை தெறிக்கவிட்டு வெறும் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சருடன் 66* (34) ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தார்.
அதை தொடர்ந்து 190 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் பிரிதிவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இணைந்து அதிரடியாக முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலான தொடக்கம் கொடுத்தனர். அதில் பிரிதிவி ஷா 16 (13) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சருடன் 66 (38) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அவருடன் மெதுவாக பேட்டிங் செய்த மிட்செல் மார்ஷ் 14 (24) ரன்களில் நடையை கட்டினார்.
டெல்லி தோல்வி:
அந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ரோவ்மன் போவல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்து வந்த இளம் வீரர் லலித் யாதவ் 1 ரன்னில் அவுட்டாகி அதைவிட அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 115/5 என சரிந்த டெல்லியின் தோல்வி உறுதியான வேளையில் கடைசி நேரத்தில் போராடிய கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 34 (17) ரன்களும் ஷர்துல் தாகூர் 17 (9) ரன்களும் அக்சர் படேல் 10* (7) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 173/7 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி போராடி தோல்வியடைந்தது. இதன் வாயிலாக இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்துள்ள டெல்லி 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஓயமாட்டேன்:
இந்த அபார வெற்றிக்கு 66* ரன்கள் விளாசி ஒரு பினிஷராக முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வருடம் முதல் போட்டியில் இருந்தே மிரட்டலாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் முறையே 32* (14), 14* (7), 44* (23), 7* (2), 34 (14), 66* (34) என 197 ரன்களை 206.95 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி எம்எஸ் தோனி, ஹர்டிக் பாண்டியா போன்ற இதர பினிஷர் என அழைக்கப்படும் வீரர்களை விட அற்புதமான பினிஷராக செயல்பட்டு வருகிறார். அதிலும் அவர் பங்கேற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் கடைசி வரை அவரை பவுலர்கள் அவுட் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
இப்படி அபாரமாக செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு விளையாடுவதே தமது லட்சியம் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில் மீண்டும் அபாரமாக செயல்பட்டு தன்னை இந்திய அணியில் விளையாட தகுதியானவன் என நிரூபித்துள்ள அவர் இந்தியாவிற்கு உலக கோப்பையை வெல்லும் வரை ஓயமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துள்ளார்.
இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு மிகப்பெரிய லட்சியம் உள்ளது என்பதால் அதற்காக மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். இதை ஒரு சிலர் நம்ப மாட்டார்கள் என்றாலும் இந்தியாவிற்காக ஏதேனும் வித்தியாசமாக சாதிக்க வேண்டுமென்பதே எனது இலக்காகும். இதுகூட (ஐபிஎல்) அந்த மிகப்பெரிய பயணத்தின் ஒரு பகுதிதான். விரைவில் உலக கோப்பை நடைபெற உள்ளது என்பதால் அதற்கான இந்திய அணியில் பங்கேற்று வெற்றி பெறச் செய்வதற்கு மிகுந்த ஆவலுடன் உள்ளேன்” என கூறினார்.