எனக்கு எதிரா சதி நடந்துடுச்சி. நான் திடீர் ஓய்வை அறிவிக்க அதுவே காரணம் – ஸ்ரீசாந்த் பகிரங்க குற்றசாட்டு

Sreesanth
- Advertisement -

உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கேரளாவை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நேற்று அறிவித்தார். கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவிற்காக முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் அதன்பின் மிகச் சிறப்பாக செயல்பட்டு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடத் தொடங்கினார்.

Sreesanth 1

- Advertisement -

கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை யாருமே எதிர்பாராத வண்ணம் எம்எஸ் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்று சரித்திரம் படைத்தது. அந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி மற்றும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அந்த அணியின் மிஸ்பா-உல்-ஹக் கொடுத்த கேட்ச்சை கச்சிதமாக பிடித்தது போன்ற பல வகைகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்ரீசாந்த் முக்கிய பங்காற்றி இருந்தார்.

வீணடிக்கப்பட்ட திறமை:
அதை தொடர்ந்து அதே வருடம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்ற ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருந்தார். அதன் காரணமாக 2010 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பந்துவீச்சாளராக உருவெடுத்து அவர் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

இப்படி தனது திறமையால் பெரிய ஜாம்பவானாக வரவேண்டிய அவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பங்கேற்றபோது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். இருப்பினும் அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்ற அவர் வழக்கு தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றியும் கண்டார். ஆனால் அதற்குள் 37 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு முற்றிலும் முடிந்து போனது. இருப்பினும் கூட இந்தியாவிற்காக மீண்டும் விளையாட ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் கேரளா அணிக்காக விளையாடி தீவிர முயற்சிகளில் பங்கேற்று வந்தார்.

- Advertisement -

ஆனாலும் தற்போது 39 வயதை கடந்துவிட்ட காரணத்தால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் வழி விடும் வண்ணம் உள்ளூர் உட்பட அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விடை பெற்றுள்ளார். ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு ஜாம்பவானாக வரவேண்டிய அவர் இன்று தவறான வழியில் சென்றால் என்னாகும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாய் ஓய்வு பெற்றுள்ளார் என்றே கூறலாம்.

Sreesanth

சதி செய்த கேரளா:
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தமக்கு பேர்வெல் மேட்ச் நடத்தாமல் கேரள கிரிக்கெட் வாரியம் சதி செய்துவிட்டதாக ஸ்ரீசாந்த் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி பிரபல மலையாள மனோரமா பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு. “ரஞ்சி கோப்பையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட காத்திருந்தேன். அப்போது அந்தப் போட்டிக்கு முன்பாக நடந்த மீட்டிங்கில் அதுதான் எனது கடைசி போட்டியாக இருக்கும் என்பது பற்றி அணி நிர்வாகத்திடம் தெளிவாகக் கூறினேன். மேலும் அதன் வாயிலாக எனக்கு வழி அனுப்பும் போட்டி (பேர்வெல் மேட்ச்) கிடைக்கும் என நம்பினேன் ஏனெனில் நான் அதற்கு தகுதியானவன்” என கூறினார்.

- Advertisement -

அதாவது ரஞ்சி கோப்பை 2021/22 சீசனில் கேரளா அணிக்காக விளையாடி வந்த அவர் குஜராத் அணிக்கு எதிரான போட்டி தான் தனது கடைசி கிரிக்கெட் போட்டியாக இருக்கும் என்று கேரள கிரிக்கெட் வாரியத்திடம் முன்கூட்டியே தெரிவித்ததாக கூறினார். முன்கூட்டியே தெரிவித்ததால் அதை தமக்கு வழி அனுப்பும் போட்டியாக கேரள கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகம் நடத்தும் என நம்பியதாக தெரிவித்துள்ள அவர் இறுதிவரை அது போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு தாம் தகுதியானவன் என அவர் தனது ஆதங்கத்தையும் கூறியுள்ளார்.

sreesanth

எதிர்காலம் என்ன:
“இப்போதும் கூட 19 வயது இளம் வீரர்களைப் போல 132 கீ.மீ வேகத்தில் என்னால் தொடர்ச்சியாக பந்து வீச முடியும். ஆனால் அதற்காக ஒரு எதிர்கால அடுத்த தலைமுறை வீரரின் இடத்தை சாப்பிடுவதற்கு நான் விரும்பவில்லை. இருப்பினும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்க நான் விரும்புகிறேன். மேலும் அது போன்ற வெளிநாட்டு தொடர்களில் பயிற்சியாளராக செயல்படவும் எனக்கு அழைப்புகள் வருகின்றன.

- Advertisement -

அத்துடன் எனது சினிமா பயணத்திலும் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். குறிப்பாக வரும் ஏப்ரல் மாதம் எனது முதல் தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் கொம்பேகவுடா 2 எனும் கன்னட திரை படத்திலும் நான் நடித்துள்ளேன்” என இதுபற்றி ஸ்ரீசாந்த் மேலும் கூறினார்.

இதையும் படிங்க : வாய்ப்பு கிடைக்காத விரக்தி. இந்தியாவை விட்டு வெளியேறும் புஜாரா – அதிகாரபூர்வ அறிவிப்பு (காரணம் இதுதான்)

இந்தியாவில் இனி எந்த வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ள அவர் வருங்காலங்களில் சினிமாவில் தீவிரமாக நடிக்க உள்ளதாக தனது எதிர்காலத்தைப் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement