- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உ.கோ’யில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் 11 பேர் இந்திய அணி தயார் – கேப்டன் ரோஹித் அறிவிப்பு

அனைவரது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்று அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியுள்ளது.

ஆனாலும் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 2 முக்கிய வீரர்கள் இல்லாதது ஆரம்பத்திலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 1992 முதல் தொடர்ச்சியாக வென்று வந்த தங்களை கடந்த உலக கோப்பையில் முதல் முறையாக தோற்கடித்து தலைகுனிய வைத்த பாகிஸ்தானை அதே துபாயில் ஆசிய கோப்பை லீக் சுற்றில் வென்றாலும் சூப்பர் 4 சுற்றில் தோற்ற இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

11 பேர் அணி தயார்:
அத்துடன் ஆசிய கோப்பையில் காயத்தால் பங்கேற்காத சாஹீன் அப்ரிடி இம்முறை களமிறங்குவதால் இந்தியாவால் வெல்ல முடியுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த உலகக் கோப்பைக்கு பின் புதிதாக பொறுப்பேற்ற ரோகித் – டிராவிட் கூட்டணி சோதனை முயற்சி என்ற பெயரில் 11 பேர் அணியில் அடிக்கடி மாற்றங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்டு ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது போன்ற தேவையற்ற மாற்றங்கள் ஆசிய கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் தோல்வியை பரிசளித்தது.

அதனால் முதலில் 11 பேர் கொண்ட உறுதியான அணியை இந்தியா முடிவு செய்ய வேண்டுமென சோயப் அக்தர், டேனிஷ் கனேரியா, ரசித் லதீப் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் வெளிப்படையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இந்தியாவின் 11 பேர் அணியை உறுதி செய்துவிட்டதாக கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடைசி நேரத்தில் முடிவெடுப்பதை நான் நம்புவதில்லை. நாங்கள் எங்களுடைய வீரர்களுக்கு முன்கூட்டியே அது பற்றி தெரிவித்து முன்கூட்டியே தயாராவதை விரும்புகிறோம். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்னுடைய 11 பேர் அணியை தேர்வு செய்து விட்டேன். அதில் இடம் பெற்றுள்ள வீரர்களிடம் அதை தெரிவித்துள்ளேன். அதனால் அப்போட்டிக்கு அவர்கள் நல்லபடியாக தயாராவதை நான் விரும்புகிறேன். இப்போதெல்லாம் அனைத்து அணிகளும் அதிரடியாக விளையாடும் அணுகுமுறைக்கு மாறியுள்ளன. ஆரம்பத்தில் 140 ரன்கள் அடித்தால் வெற்றி பெற போதுமானது என்ற நிலைமை இருந்தது. ஆனால் அனைவரும் தற்போது அதை 14 – 15 ஓவரில் அடிக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.

அதாவது 11 பேர் அணியை கடைசி நேரத்தில் தேர்வு செய்து பதற்றத்தை ஏற்படுத்தாமல் முன்கூட்டியே முடிவெடுத்து அதை வீரர்களிடமும் தெரிவித்து தயாராகி வருவதாக கூறியுள்ள ரோகித் சர்மா போட்டி நாளன்று அதை அனைவருக்கும் அறிவிப்போம் என்று கூறியுள்ளார். மேலும் சூர்யகுமார் யாதவ் தங்களுடைய துருப்புச்சீட்டு என்று தெரிவிக்கும் அவர் பும்ராவுக்கு பதில் தேர்வாகியுள்ள ஷமியை பற்றி பேசியது பின்வருமாறு. “ஷமியை இன்னும் நான் பார்க்கவில்லை. இருப்பினும் அவர் நல்லபடியாக இங்கே வந்து பிரிஸ்பேனில் பயிற்சி செய்வதாக கேள்விப்பட்டேன். அதனால் விரைவில் அவரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”

“மேலும் காயங்கள் நமது கையில் இல்லை என்பதால் அதில் நீங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாது. அதை சமாளிக்க எங்களது வீரர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோம் என்பதால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக நாங்கள் முழுமையாக தயாராக இருப்போம். அத்துடன் எப்போதும் நான் கடைசி நேரத்தில் மாற்றத்தை செய்து அதை ஒருவரிடம் சொல்வதை நம்புவதில்லை. சூர்யா எங்களுடைய துருப்பு சீட்டு வீரர் என்பதால் அவர் தன்னுடைய பார்மை தொடர்வார் என்று நம்புகிறேன். அவரும் தற்சமயத்தில் தன்னுடைய தன்னம்பிக்கையில் உறுதியாக உள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -
Published by