- Advertisement -
ஐ.பி.எல்

எனக்கு கணக்கு பிடிக்காது, பிளே ஆஃப் போகலன உலகமும் அழியாது – ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்த தல தோனி

ஐபிஎல் 2022 தொடர் கலை கட்டியுள்ள நிலையில் மே 8-ஆம் தேதி நடைபெற்ற 55-ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் சந்தித்தன. நவிமும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் அதிரடியாக 208/6 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் இணைந்து டெல்லி பவுலர்களை ஆரம்பத்திலேயே அதிரடி சரவெடியாக எதிர்கொண்டு 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளமிட்டன.

அதில் ருதுராஜ் 41 (33) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சிவம் துபே தனது பங்கிற்கு அதிரடியாக 32 (19) ரன்களை எடுத்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த கான்வே 7 பவுண்டரி 5 சிக்சருடன் 87 (49) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ராயுடு 5 (6), மொய்ன் அலி 9 (4) போன்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தாலும் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21* (8) ரன்கள் குவித்த எம்எஸ் தோனி அதிரடியான பினிஷிங் கொடுத்தார். டெல்லி சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்களை எடுத்துள்ளார்.

- Advertisement -

சென்னை அபாரம்:
அதன்பின் 209 என்ற கடின இலக்கை துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர் 19 (12) பரத் 8 (5) ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 25 (20) ரிஷப் பண்ட் 21 (11) ஆகிய முக்கிய வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்தாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றினார்கள். இறுதியில் ரோவ்மன் போவல் 3 (9) அக்சர் படேல் 1 (3) ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 17.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டான டெல்லி பரிதாபமாக தோற்றது. சென்னை சார்பில் பந்துவீச்சில் கலக்கிய மொய்ன் அலி 3 விக்கெட்டுகளையும் முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங், ட்வயன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை ருசித்த சென்னை இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனால் பங்கேற்ற 11 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து கூடுதல் ரன்ரேட்டை பெற்ற சென்னை கொல்கத்தாவை முந்தி முதல் முறையாக 8-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

- Advertisement -

பிளே ஆஃப் வாய்ப்பு:
இந்த வருடம் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜடேஜா தலைமையில் 4 தொடர் தோல்விகளை சந்தித்த நடப்புச் சாம்பியன் சென்னையின் பிளே ஆப் கனவு ஆரம்பத்திலேயே பாதி பறிபோனது. அத்துடன் கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் சொதப்பிய ஜடேஜா அந்த பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கி விட்டார். அதைத் தொடர்ந்து 4 கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி தலைமையில் மீண்டும் வலுவான அணியாக காட்சியளிக்கும் சென்னை இனி வரும் 3 போட்டிகளில் வென்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செய்வதற்கான வாய்ப்பு வெறும் 3% மட்டுமே உள்ளது.

தற்போதைய நிலைமையில் எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு அந்த அணி தோற்க வேண்டும் இந்த அணி ஜெயிக்க வேண்டும் என்பது போன்ற கணக்குகளைப் போட வேண்டியுள்ளது. எனவே
அடுத்த 3 போட்டிகளில் கட்டாயம் வென்று கணக்குகளின் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவீர்களா என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு எம்எஸ் தோனி நேற்றைய போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. ”

“நான் எப்போதுமே கணக்குகளுக்கு பெரிய ரசிகன் கிடையாது. சொல்லப்போனால் பள்ளியில் கூட எனக்கு கணக்கு பிடிக்காது. நெட் ரன்ரேட் என்பது நிச்சயம் உதவாது என நினைக்கிறேன். எனவே நாங்கள் ஐபிஎல் தொடரை மட்டும் என்ஜாய் பண்ண உள்ளோம். போட்டிக்கு எதிரணிகள் உள்ளதால் எதைப் பற்றியும் நினைக்காமல் பிரஷர் இல்லாமல் விளையாட உள்ளோம். நாங்கள் அடுத்த போட்டியில் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே நினைக்கிறோம். ஒருவேளை நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றால் அது மிகச்சிறந்ததாக இருக்கும். ஒருவேளை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும் கூட அத்துடன் உலகம் நின்று விட்டது என்று அர்த்தமில்லை” என்று பேசினார்.

அதாவது 2008 முதல் ஒவ்வொரு வருடமும் குறைந்தது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று வந்த ஒரே அணியாக சாதனை படைத்த சென்னை கடந்த 2020 துபாயில் நடந்த ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் வரலாற்றிலேயே முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அவமானத்தைச் சந்தித்தது. இருப்பினும் கூட அதற்கு அடுத்த வருடமே அதே துபாயில் அபாரமாக செயல்பட்டு 4-வது முறையாக கோப்பையை வென்றது. ஒருவேளை அது போல் இந்த வருடம் நாக் – அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும் கூட அதோடு உலகம் நின்று விடாது என தெரிவித்த தோனி அடுத்த வருடம் மீண்டும் இரு மடங்காக திரும்பி வந்து கோப்பையை வெல்வோம் என ரசிகர்களுக்கு தெம்பு வார்த்தைகளை ஊட்டியுள்ளார்.

- Advertisement -
Published by