17 வருசம் கழிச்சு வந்தாங்க அதான் – பாகிஸ்தான் தோல்வி பற்றி ரமீஸ் ராஜா கடுப்பாக பேசியது இதோ

Ramiz-raja
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விரைவில் துவங்கும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக இறுதி கட்டமாக தயாராகி வரும் கிரிக்கெட் அணிகளுக்கு மத்தியில் 2009க்குப்பின் கோப்பையை வெல்ல பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் கடைசி கட்டமாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் களமிறங்கிய அந்த அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி 6 போட்டிகளின் முடிவில் 3 – 3 என தொடரை சமன் செய்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற முக்கியமான கடைசி போட்டியில் பந்து வீச்சில் சொதப்பி பீல்டிங்கில் ஒருசில முக்கிய கேட்ச்களை கோட்டைவிட்ட பாகிஸ்தான் 209/3 ரன்களை கொடுத்தது.

அதன்பின் சொந்த மண்ணில் தலைநிமிர 210 ரன்களை துரத்திய அந்த அணிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் 4 ரன்களில் முதல் ஓவரிலேயே அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்த ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் 1 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார். அதனால் 5/2 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணியால கடைசி வரை அதிலிருந்து மீளமுடியாமல் 20 ஓவர்களில் 142/8 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மறுபுறம் ஆரம்பம் முதலே சவாலை கொடுக்கும் வகையில் செயல்பட்ட இங்கிலாந்து பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்று மிகப்பெரிய புத்துணர்ச்சி வெற்றியுடன் உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா பயணித்துள்ளது.

- Advertisement -

17 வருடங்கள்:
முன்னதாக பாகிஸ்தான் நாட்டுக்கு 17 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த தொடரில் இங்கிலாந்து பங்கேற்றதால் ஆரம்பம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பாபர் அசாம் – முகமத் ரிஸ்வான் ஆகிய 2 உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை தொடக்க வீரர்களாக கொண்டிருக்கும் பாகிஸ்தான் மிடில் ஆர்டரில் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் டாப் ஆர்டரை மட்டும் நம்பியிருக்கும் பலவீனம் இந்த தொடரில் வெளிப்பட்டது. மேலும் கடைசி கட்ட ஓவர்களில் அந்த அணி பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மொத்தத்தில் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வி பாடத்தை கற்றும் பாகிஸ்தான் மீண்டும் சொதப்பலாக செயல்பட்டு தோல்வியடைந்ததை பார்க்கும் ரசிகர்கள் இதற்காகவா 17 வருடங்கள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட காத்திருந்தீர்கள் என்று கலாய்க்கிறார்கள். அந்த கிண்டலான கருத்தையே கையில் எடுத்துள்ள பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா 17 வருடங்கள் கழித்து தங்கள் நாட்டுக்கு வந்த இங்கிலாந்தை அந்த வெறும் கையுடன் அனுப்பக்கூடாது என்பதாலேயே தோற்றோம் என்று விமர்சகர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் கடுப்பாக பதிலளித்தார்.

- Advertisement -

இது பற்றி கராச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தை எங்களது சொந்த மண்ணில் விளையாடியது மிகப்பெரிய கவுரவமாகும். அவர்கள் இங்கு 17 வருடங்கள் கழித்து வந்ததால் கோப்பை வெல்வதை நாங்கள் எப்படி தடுக்க முடியும். அதனால் அவர்கள் வெறும் கையுடன் நாடு திரும்புவதை நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். மேலும் இந்த தொடர் அனைவரின் இதயத் துடிப்பை எகிற வைத்து பரபரப்பாக நடைபெற்றது”

“அதில் பாகிஸ்தான் கடைசியாக பதிவு செய்த 2 வெற்றிகளை தவிர்த்து எஞ்சிய தொடர் முழுவதும் அவர்கள் எங்களை தோற்கடித்து விட்டார்கள். இருப்பினும் இந்த தொடரில் நிறைய தோல்வி பாடங்களை கற்றுள்ள பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட நான் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் பாகிஸ்தான் ரசிகர்களையும் நமது அணிக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- Advertisement -

மேலும் எங்களது நாட்டில் வந்து விளையாடியதற்காக இங்கிலாந்துக்கு மீண்டும் ஒரு முறை மனதார நன்றி தெரிவிக்கிறேன்”. “உங்களுடன் விளையாடியதை மிகப்பெரிய கௌரவமாகவும் பெருமையாகவும் கருதுகிறோம். விரைவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் உங்களை மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களின் பாதுகாப்பான பயணத்துக்கான வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : சின்னப்புள்ள மாதிர – தெ.ஆ வீரரிடம் சஹால் செய்த சிரிக்க வைக்கும் காரியம், ரசிகர்கள் கலகலக்கும் வீடியோ உள்ளே

விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு பின் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் சொந்த மண்ணில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள பாகிஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement