
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய அடுத்த 2 போட்டிகளில் இந்தியா பெரிய பின்னடைவை சந்தித்தது. அதற்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்படுவது முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.
அந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா ஃபிட்டாக இல்லாமல் கொஞ்சம் அதிக உடல் எடையுடன் இருப்பதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேரில் குல்லினன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். வேண்டுமானால் விராட் கோலியை பார்த்து விட்டு ரோகித் சர்மாவை பாருங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அதனால் இனிமேலும் 5 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடும் அளவுக்கு ரோகித் சர்மா நீண்ட கால பிளேயர் கிடையாது என்று விமர்சித்திருந்தார்.
அது போக ரோஹித் சர்மா சொந்த மண்ணில் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தக்கூடிய பேட்ஸ்மேன் என்றும் குல்லினன் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் ரோஹித் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் உடல் எடையுடன் இருப்பதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்சல் கிப்ஸ் கூறியுள்ளார். அதே சமயம் ரோகித் ஃபிட்டாக இருக்க வேண்டியது கடமை என்றும் அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் யார் பெயரையும் குறிப்பிட வேண்டியதில்லை. நீங்கள் அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளலாம். ஃபிட்டாக இல்லாத வீரர்கள் உலகம் முழுவதிலும் கொஞ்சம் அதிக உடல் எடையுடன் இருப்பதை உங்களால் பார்க்க முடியும். எனவே அது தனி நபர்களை பொறுத்தது. நான் பேட்ஸ்மேன் மட்டுமே. ரோகித் பந்து வீசுவதில்லை”
“இவை அனைத்தும் தனிநபர் வீரர்கள் தங்களுடைய வழியில் எப்படி அணியின் வெற்றிக்கு பங்காற்ற விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால் பேட்ஸ்மேன் அல்லது பவுலராக நீங்கள் இருக்கும் போது அணியின் வெற்றிக்காக களத்தில் பங்காற்ற நீங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டியது உங்களுடைய கடமை. அனைவரது மனநிலை அப்படித்தான் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: 13 வயது வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்ய காரணம் இதுதான் – சஞ்சு சாம்சன்
“ஏனெனில் டி20 போட்டிகள் சுற்றியிருக்கும் சூழலிலும் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி வரவிருக்கும் சூழலிலும் நீங்கள் எப்படி உங்களுடைய அணிக்காக பங்காற்ற விரும்புகிறீர்கள் என்பது முக்கியம்” எனக் கூறினார். அந்த வகையில் விராட் கோலி அளவுக்கு ரோகித் சர்மா ஃபிட்டாக இல்லை என்று கபில் தேவ் உட்பட சில முன்னாள் வீரர்கள் கடந்த காலங்களில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.