- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : வரலாற்று தோல்வியால் ஏற்பட்ட பின்னடைவு. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இந்தியா செய்யவேண்டியது இதோ

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் 3 நாட்களில் அபாரமாக செயல்பட்ட இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பியதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் துவங்கியது. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா போராடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி ரிஷப் பண்ட் 146 ரன்களும் பொறுமையாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் வெறும் 284 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2-வது இன்னிங்சில் 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பில் சொதப்பலாக பேட்டிங் செய்ததால் வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

வரலாற்று தோல்வி:
விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முக்கிய வீரர்கள் 2-வது வாய்ப்பிலும் சொதப்பிய இந்தியாவுக்கு அதிக பட்சமாக புஜாரா 66 ரன்களும் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 378 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்ற அற்புதமான தொடக்கத்தைப் பெற்று மிரட்டலை கொடுத்தது. அப்போது 3 அடுத்தடுத்த விக்கெட்டுகள் எடுத்த இந்தியா வெற்றிக்காக போராடினாலும் அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக பேட்டிங் செய்து 142* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 114* ரன்களும் குவித்து சூப்பரான பினிசிங் கொடுத்தனர்.

அதனால் 378/3 ரன்களை எடுத்த இங்கிலாந்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் பும்ரா தலைமையில் போராடிய இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. மேலும் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று 350க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயித்த போட்டியில் முதல் முறையாக தோல்வியடைந்த இந்தியா இப்போட்டியின் வாயிலாக வரலாற்று தோல்வியை சந்தித்து அவமானத்துக்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

சாம்பியன்ஷிப் பின்னடைவு:
முன்னதாக ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 – 23 கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த தொடரை வெல்ல தவறினாலும் அதற்கான புள்ளி பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் நீடித்தது. ஆனால் இப்போட்டியில் 2 ஓவர்கள் இந்தியா மெதுவாக பந்து வீசியதால் ஏற்கனவே வைத்துள்ள புள்ளிகளில் 2 புள்ளிகளை கழித்துள்ள ஐசிசி இப்போட்டிக்கான இந்திய வீரர்களின் சம்பளத்தில் இருந்து 40% அபராதமாக விதித்து அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் இந்தியாவுக்கு மேலும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இதேபோல் 2 புள்ளிகள் கழிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா தகுதி பெற முடியாமல் போனது. மேலும் 2 புள்ளிகள் கழிக்கப்பட்டதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தற்போது இந்தியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 2-வது இடத்திற்கு முன்னேறியது. இதனால் வரும் 2023இல் நடைபெறப்போகும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 – 23 இறுதிப்போட்டிக்கு இந்தியா சுலபமாக தகுதி பெறுவதில் மாபெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தொங்கும் கத்தி:
இப்போட்டியில் வென்றிருந்தால் அடுத்து வரும் 6 லீக் போட்டிகளில் 1 தோல்வி அல்லது டிரா சந்தித்தாலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பிருந்தது. ஆனால் இப்போட்டியில் தோல்வியடைந்ததால் அடுத்ததாக வரும் டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வரும் 2023 பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG :தோல்வி ஓகே தான். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து செய்த சதிக்கு என்ன பதில், வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த 6 போட்டிகளிலும் தோல்வி என்பதையும் தாண்டி டிரா என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். கடந்த 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் தொடரில் அபாரமாக செயல்பட்ட விராட் கோலி தலைமையிலான இந்தியா 2021இல் சௌதம்ப்டன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நியூசிலாந்திடம் பரிதாபமாக தோற்றதை ரசிகர்கள் மறக்க முடியாது. ஆனால் இம்முறை லீக் சுற்றிலேயே தடுமாறும் இந்தியா முதலில் பைனலுக்கு செல்லுமா என்ற அச்சம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Published by