ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த தோல்விகளுக்கு தோனி முக்கியமான காரணம் என்று எதிரணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். எனவே 43 வயதில் காலம் கடந்த தோனி இனிமேலும் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வீட்டில் உட்காரலாம் அல்லது வர்ணனையாளராக செயல்படலாம் என்று எதிரணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.
உண்மையில் இந்த வருடம் பவர் பிளே ஓவர்களில் சிஎஸ்கே ஓப்பனிங் ஜோடி 30 ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைப்பதில்லை. அதே போல மிடில் ஆர்டரில் சிவம் துபே உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்கத் தவறுகின்றனர். அதனால் 10 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்து விடும் சென்னைக்கு லோயர் ஆர்டரில் தோனி நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
உண்மை என்ன:
இருப்பினும் ஒரு கட்டத்துக்கு பின் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை அல்லது அதிரடியாக விளையாட அவர் முயற்சிக்கவில்லை என்பது நிதர்சனமாகும். ஆனால் அங்கே டெத் ஓவர்களில் எதிரணி பவுலர்கள் நன்றாக பௌலிங் செய்கிறார்கள் என்பது வெளியில் விமர்சிப்பவர்களுக்கு தெரியாது. எனவே தோல்விக்கு தோனி மட்டும் எப்படி காரணமாக முடியும்? என்பது உண்மையான சிஎஸ்கே ரசிகர்களின் பதில் கேள்வியாகும்.
2வதாக தோனிக்கு முன்பே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா 38 வயதில் வருடம் முழுவதும் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட அவர் இந்த வருடம் மும்பைக்காக முதல் 3 போட்டிகளில் அதுவும் ஓப்பனிங்கில் 0, 8, 13 என 21 ரன்களை 105.00 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே தடுமாற்றமாக எடுத்துள்ளார். ஆனால் அவரை யாரும் டெஸ்ட் ஆட்டம் விளையாடவில்லை என்று கிண்டலடித்து ஓய்வு பெறச் சொல்வதில்லை.
ரோஹித், பண்ட் நிலை:
அதே 3 இன்னிங்சில் 30, 16, 30 என 70 ரன்களை 138.18 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள தோனி மட்டும் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவதாக சொல்லி கிண்டலடித்து ஓய்வு பெறச் சொல்கிறார்கள். இத்தனைக்கும் 38 வயதில் ரோஹித் சர்மா 20 ஓவர்கள் ஃபீல்டிங் செய்ய முடியாமல் இம்பேக்ட் வீரராக விளையாடி வருகிறார். ஆனால் தோனி 43 வயதில் முழங்காலில் செய்த அறுவை சிகிச்சையும் தாண்டி 20 ஓவர் கடினமான விக்கெட் கீப்பிங் செய்கிறார்.
அத்துடன் மின்னல் வேகத்தில் சூரியகுமார் போன்றவரை ஸ்டம்பிங் செய்கிறார். இதை விட 27 கோடிக்கு வாங்கப்பட்ட 28 வயது இளம் வீரர் ரிஷப் பண்ட் 4 போட்டிகளில் 2, 2, 15, 0 என மொத்தம் 19 ரன்களை 4.75 என்ற சராசரியில் 59.38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து லக்னோவுக்கு பின்னடைவைக் கொடுத்த வருகிறார். மேலும் குஜராத்துக்கு எதிரானப் போட்டியில் எளிமையான ஸ்டம்பிங் வாய்ப்பை அவர் தவற விட்டது லக்னோ தோல்விக்கு காரணமானது.
ஓய்வை வற்புறுத்தலாமா:
ஆனால் அவரை ஓய்வு பெறச் சொல்லாத விமர்சகர்கள் தோனியை மட்டும் வீட்டுக்கு செல்லுங்கள் என்று பேசுகின்றனர். இது மட்டுமின்றி இதே ஐபிஎல் தொடரில் இன்னும் கணிசமான நிறைய வீரர்கள் தோனியை விட தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களை யாரும் ஓய்வு பெறுமாறு விமர்சிப்பதில்லை. இத்தனைக்கும் 2019லயே இந்தியாவுக்காக சரியான நேரத்தில் ஓய்வு பெற்று விட்ட தோனி தமது மகிழ்ச்சிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதாக வெளிப்படையாக சொல்லி விட்டார்.
இதையும் படிங்க: தோல்விக்கு காரணம் தோனி கிடையாது.. ஆனா இதை செய்யலன்னா தோனி ரிட்டையராகலாம்.. வாசிம் ஜாபர்
அப்படியிருந்தும் பலரும் அவரை ஓய்வு பெறுமாறு விமர்சிக்கிறார்கள். இங்கே தோனியை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பைகள், இதே சென்னைக்காக 5 கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்ற தோனி விரும்பும் வரை ஐபிஎல் தொடரில் விளையாடத் தகுதியுடையவர். நாட்டுக்காக உலகக் கோப்பை வென்றவரை குறைந்தபட்சம் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுமாறு வற்புறுத்துவதற்கு இங்கு யாருக்கும் தகுதியில்லை.



