அங்கேயும் தரமான வீரர்கள் – தெ.ஆ மற்றும் துபாய் டி20 தொடர்களின் ஏலத்தில் மும்பை வாங்கிய முதற்கட்ட 8 வீரர்களின் பட்டியல்

Bravo
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் இந்த வருடம் 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக விரிவடைந்து ரசிகர்களை மகிழ்வித்து நிறைவுபெற்றது. வரும் காலங்களில் 94 போட்டிகள் கொண்ட தொடராக மேலும் விரிவடைய உள்ள இந்த ஐபிஎல் இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரை போலவே அதில் அணிகளை வாங்கியுள்ள உரிமையாளர்களும் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு தங்களது நிர்வாகத்தை மேலும் விரிவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கப்பட்டுள்ள புதிய டி20 தொடர்களில் சில ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ளனர்.

அதில் சர்வதேச டி20 லீக் என்ற பெயரில் துபாயில் உருவாக்கப்பட்டுள்ள டி20 தொடரில் பங்கேற்கும் 6 அணிகளில் 4 அணிகளை அம்பானி, அதானி குழும நிர்வாகமும் டெல்லி, கொல்கத்தா ஐபிஎல் அணி நிர்வாகங்களும் வாங்கியுள்ளன. அதேபோல் டி20 சேலஞ்ச் என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் சென்னை, மும்பை, ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய 6 அணி நிர்வாகங்கள் மொத்தமாக வளைத்துப் போட்டுள்ளன. இவ்விரு தொடர்களும் வரும் 2023 ஜனவரியில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் புதிய அணிகளை வாங்கியுள்ள ஐபிஎல் நிர்வாகங்கள் அதற்கான பெயர் மற்றும் வீரர்களை தேர்வு செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

எம்ஐ குழுமம்:
அந்த அவையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது அணிகளின் புதிய பெயர்களை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் அணிக்கு “எம்ஐ கேப் டவுன்” என பெயரிட்டுள்ள அந்த அணி நிர்வாகம் துபாயில் வாங்கியுள்ள அணிக்கு “எம்ஐ எமிரேட்ஸ்” என்ற பெயரை சூட்டியுள்ளது. அந்த நிலைமையில் இந்த தொடர்களில் முதல் கட்டமாக பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது.

எப்போதுமே அணியின் தூண்களாக செயல்படும் வீரர்கள் திறமையானவர்களாகவும் தரமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய மும்பை நிர்வாகம் தங்களது கிளை அணிகளிலும் அதே பாலிசியை பின்பற்றியுள்ளதாக அதன் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அதில் தென் ஆப்பிரிக்காவில் விளையாடும் தங்களது எம்ஐ கேப் டவுன் அணிக்கு “ட்ராப்ட்” அடிப்படையில் நடைபெற்ற வீரர்கள் தேர்வில் 3 வெளிநாட்டு வீரர்களையும் 2 தென்னாபிரிக்க வீரர்களையும் மும்பை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

தரமான வீரர்கள்:
அதில் முதலாவதாக உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக போற்றப்படும் ஆப்கானிஸ்தானின் ரசித் கானை மும்பை நிர்வாகம் வாங்கியுள்ளது. இவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதேபோல் பஞ்சாப் அணியில் விளையாடும் முரட்டுத்தனமான சிக்ஸர்களை பறக்கவிடும் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் முந்தைய சீசன்களில் சென்னை அணிக்காக துடிப்புடன் விளையாடிய இளம் ஆல்-ரவுண்டர் சாம் கரண் ஆகியோரையும் மும்பை வாங்கியுள்ளது.

இதுபோக தென் ஆப்பிரிக்காவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படும் காகிஸோ ரபாடாவை வாங்கியுள்ள அந்த அணி நிர்வாகம் 2022 அண்டர்-19 உலக கோப்பை தொடர் நாயகன் விருதை வென்று இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் மிரட்டிய இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸையும் வாங்கியுள்ளது. ரசிகர்களால் குட்டி ஏபிடி என்றழைக்கப்படும் அவர் உட்பட மும்பை வாங்கியுள்ள 5 வீரர்களும் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இருப்பதால் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் பங்கேற்கும் மும்பை அணி இப்போதே வலுவானதாக காட்சியளிக்கிறது.

துபாய் டி20:
இவர்களை வாங்குவதற்கு தங்களது ஏலத்தொகையில் 50 சதவீதத்தை செலவழித்துள்ள மும்பையிடம் இன்னும் 2 மில்லியன் டாலர்கள் எஞ்சியுள்ளது. அதேபோல் துபாயில் விளையாடும் தங்களது “எம்ஐ எமிரேட்ஸ்” அணியில் ஏற்கனவே மும்பை அணியில் காலம் காலமாக தங்களது நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீசின் கைரன் பொல்லார்ட் மற்றும் சென்னையின் நம்பிக்கை நட்சத்திர ஆல்ரவுண்டராக விளையாடி வரும் ட்வயன் ப்ராவோ ஆகிய 2 தரமான வீரர்களை வாங்கியுள்ளது.

அதுபோக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த 20 வயது இளம் வீரர் வில் ஸ்மீட் ஆகியோரையும் அந்த அணி நிர்வாகம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் தங்களது அணியில் விளையாடும் மொத்த வீரர்களையும் பெரிய ஏலத்தில் வாங்கியபின் இறுதிகட்ட அணியை மும்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement