1947இல் கத்துக்குட்டியாக தொடங்கி 2022இல் உலக கிரிக்கெட்டை ஆளும் இந்தியா – சரித்திர பயணத்தின் சிறப்பு தொகுப்பு

- Advertisement -

இந்திய திருநாடு ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று 75 வருட சுதந்திரத்தை கடந்த 76ஆவது சுதந்திரத்தை கோலாகலமாகக் கொண்டாடியது. கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் கத்துக்குட்டியாக ரொம்பவே தடுமாறி இந்தியா முதல் வெற்றியைப் பெறுவதற்கு 20 வருடங்கள் எடுத்துக்கொண்டது. ஆனால் சீரான வளர்ச்சியே உண்மையான உச்சத்தின் அடித்தளம் என்பது போல் நாட்கள் செல்ல செல்ல சச்சின் டெண்டுல்கர் போன்ற தரமான வீரர்களின் வருகையால் உலக அணிகளுடன் போட்டி போடும் அணியாக உருவெடுத்த இந்தியா இன்று உலகின் நம்பர்-1 அணியாகும் அளவுக்கு கடந்த 90 வருடங்களில் கடுமையாக உழைத்து வளர்ந்துள்ளது.

1947 முதல் 2022 வரை:
அதில் நாடு சுதந்திரமடைந்த பின் வளர்ச்சியை காண துவங்கிய இந்தியா 1947இல் கத்துக்குட்டியாக இருந்தாலும் இன்று தரத்திலும் பணத்திலும் உலகை ஆளும் அணியாக உருவெடுத்துள்ள சரித்திர பயணத்தைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. நாடு சுதந்திரமடைந்த பின் முதல் முறையாக 1947இல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா லாலா அமர்நாத் தலைமையில் 4 – 0 (5) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

2. 1948இல் முதல் முறையாக இந்தியாவில் கிரிக்கெட் பற்றிய வர்ணனையை ஆல் இந்தியா ரேடியோ நிர்வாகம் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நேரலையாக செய்யத் துவங்கியது.

- Advertisement -

3. 20 வருடங்களாக தோல்வியடைந்து வந்த இந்தியா கடந்த 1952இல் அப்போதைய மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட சென்னையில் விஜய் ஹசாரே தலைமையில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

4. இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானுக்கு முதல் முறையாக கடந்த 1954இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா விளையாடியது.

- Advertisement -

5. கடந்த 1955இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார் பாலி உம்ரிகர். அவரது பெயரில் இப்போது இந்திய வீரர்களுக்கு வருடாந்திர விருதை பிசிசிஐ அறிவித்து வருகிறது.

6. இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக கருதப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை 1957இல் புதிய விதிமுறைகளுடன் சீர் படுத்தப்பட்டது. 1979இல் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

- Advertisement -

7. 1964இல் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 ரன்களைக் மட்டும் கொடுத்த இந்திய பவுலர் பாபு நட்கர்ணி 27 மெய்டன் ஓவர்களை வீசி உலக சாதனை படைத்தார்.

8. இப்படி நல்ல வளர்ச்சியை காணத் துவங்கிய இந்திய கிரிக்கெட்டின் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை தூர்தர்ஷன் தொலைக்காட்சி கடந்த 1966இல் முதல் முறையாக துவங்கியது.

9. 1968இல் மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையில் நியூசிலாந்துக்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அந்த முதல் பயணத்திலேயே முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.

10. 1971இல் அப்போதைய முரட்டுத்தனமான வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் வலுவான இங்கிலாந்துக்கு எதிராகவும் அஜித் வடேகர் தலைமையிலான இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.

11. கிட்டதட்ட 40 வருடங்கள் கழித்து முதல் முறையாக 1973இல் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் அமைப்பு உருவாக்கப்பட்டது.

12. 1973இல் ஒருநாள் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்ற இந்தியா 1975 உலக கோப்பையில் முதல் முறையாக கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது.

13. 1981இல் முதல் முறையாக ஐசிசியின் முழு அந்தஸ்து பெற்ற உறுப்பினராக ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய மண்ணில் பிசிசிஐ நடத்தியது.

14. 1983இல் யாருமே எதிர்பாராத வகையில் கபில்தேவ் தலைமையில் அசத்திய இந்தியா வலுவான வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அந்த வெற்றி தான் இன்று கிரிக்கெட் ஆலமரமாக இந்தியாவில் வளர்ந்து நிற்க விதைக்கப்பட்ட விதையாகும்.

15. 1985இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் தோற்கடித்த சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அதில் தொடர் நாயகன் விருதாக வென்ற ரவிசாஸ்திரி அந்த காலத்திலேயே ஆடி கார் வென்றார்.

16. 1987இல் இந்தியாவின் மகத்தான பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தார்.

17. இந்திய கிரிக்கெட்டை புதிய அத்தியாயத்திற்கு எடுத்து வந்த சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது பிஞ்சு கால்களுடன் 1989இல் பாகிஸ்தானுக்கு எதிராக இளம் வயதில் அறிமுகமான இந்திய வீரராக சாதனை படைத்தார்.

18. 1991இல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் நடத்திய பிசிசிஐ 120000 டாலர்களை முதல் முறையாக முழு வருமானமாக பெற்றது.

19. நியூசிலாந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லியின் 431 டெஸ்ட் விக்கெட்கள் உலக சாதனையை இந்தியாவின் கபில்தேவ் 1994இல் உடைத்தார்.

20. இந்தியாவில் பிறந்த ஜக்மோகன் டால்மியா ஐசிசியின் முதல் தலைவராக 1997இல் பொறுப்பேற்றார்.

21. 1999இல் டெல்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் அனில் கும்ப்ளே வரலாறு படைத்தார்.

22. 2000இல் முகமது கைஃப் தலைமையிலான இந்தியா முதல் முறையாக ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்றது.

23. 2001இல் 16 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வந்த ஆஸ்திரேலியாவை விவிஎஸ் லக்ஷ்மன் – ராகுல் டிராவிட் ஆகியோர் வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்து ஹர்பஜன்சிங் ஹாட்ரிக் எடுத்து முற்றுப்புள்ளி வைத்தனர்.

24. 2002இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை சௌரவ் கங்குலி தலைமையிலான இந்தியா மழையால் இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது.

25. 2004இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேனாக வீரேந்திர சேவாக் சாதனை படைத்தார்.

26. 2007இல் வெஸ்ட் இண்டீசில் லீக் சுற்றில் வெளியேறிய ராகுல் டிராவிட் தலைமையிலான இந்தியா எம்எஸ் தோனி தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது.

27. உலகை ஆளப்போகும் ஐபிஎல் எனும் பிரீமியர் லீக் டி20 தொடரை பிசிசிஐ 2008ல் துவங்கியது.

28. 41 வருடங்கள் கழித்து நியூசிலாந்து மண்ணில் எம்எஸ் தோனி தலைமையில் கடந்த 2009இல் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது.

29. 2010இல் தொடவே முடியாது என்று கருதப்பட்ட ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் விளாசி உலக சாதனை படைத்தார்.

30. 2011இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாக எம்எஸ் தோனி தலைமையில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 28 வருடங்கள் கழித்து கோப்பையை முத்தமிட்டு அசத்தியது.

31. இந்தியாவின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் 2012, 2013இல் ஓய்வு பெற்றனர்.

32. 2013இல் இளம் வீரர்களுடன் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்து எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் டிராபி வென்றது.

33. 2016இல் உலகிலேயே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒரு தொடரில் ஒயிட்வாஷ் செய்த அணியாக தோனி தலைமையிலான இந்தியா அசத்தியது.

34. 2018இல் 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்தது.

35. 2019இல் 70 வருடங்களில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது.

36. இந்தியாவின் மகத்தான கேப்டன் எம்எஸ் தோனி 2020 சுதந்திர தினத்தில் ஓய்வு பெற்றார்.

37. 2021இல் அஜிங்கிய ரஹானே தலைமையில் வலுவான ஆஸ்திரேலியாவை மீண்டும் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரை வென்றது.

38. 2022இல் ஐபிஎல் 2023 – 2027 காலகட்டத்தின் ஒளிபரப்பு உரிமை 47,333 கோடிகளுக்கு ஏலம் போனது. இதனால் ஐசிசி மற்றும் உலக கோப்பைகளை விட தரத்திலும் பணத்திலும் உயர்ந்த ஐபிஎல் உலகில் அதிக பணத்தை கொடுக்கும் 2வது விளையாட்டாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக 2024 முதல் 94 போட்டிகளாக விரிவடையும் ஐபிஎல் அதற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை குறைக்கும் அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement