ஒருத்தர் உயிர் விஷயத்துல இப்படியா விளையாடுவீங்க. வைரலாக பரவும் இரங்கல் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – ஹீத் ஸ்ட்ரீக்கின் நண்பர்

Heath Streak Olanga
- Advertisement -

ஜிம்பாப்வே நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெத் ஸ்ட்ரீக் வரலாறு கண்ட மிகச்சிறந்த வீரங்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 1993ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டு 90களில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளை தெறிக்க விட்ட ஜிம்பாப்வே அணியில் முதன்மை வீரராக ஜொலித்து வந்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 100க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த ஒரே ஜிம்பாப்வே வீரராக சாதனை படைத்த அவர் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் எடுத்த ஒரே ஜிம்பாப்வே வீரர் என்ற சரித்திரமும் படைத்துள்ளார்.

அந்த வகையில் உலகம் முழுவதிலும் இருக்கும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு இப்போதும் பிடித்த வீரராக போற்றப்படும் அவர் ஓய்வுக்கு பின் வங்கதேசம் போன்ற அணிகளில் பயிற்சியாளராக செயல்பட்டு விடை பெற்றார். அந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஹெத் ஸ்ட்ரீக் மோசமான நோயால் தாக்கப்பட்டு தென்னாபிரிக்காவில் இருக்கும் ஜொஹன்ஸ்பர்க் நகரில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக கவலைக்கிடமாக கிடக்கும் அளவுக்கு மோசமான உடல் பாதிப்பை சந்தித்த அவர் குணமடைய வேண்டுமென்று அனைவரும் பிரார்த்திக்குமாறு ஜிம்பாப்வே விளையாட்டு துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

போலியான செய்தி:
இந்நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று ஹெத் ஸ்ட்ரீக் இயற்கை எய்தியதாக முன்னணி செய்தி நிறுவனங்களில் அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகின. குறிப்பாக ஜிம்பாப்வே அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ஹென்றி ஒலாங்கா அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. அதனால் மிகவும் சோகமடைந்த ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் வெறும் 49 வயதிலேயே இந்த உலகத்தை விட்டு பிரிந்ததை நினைத்து சமூக வலைதளங்களில் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் செய்திகளை தெரிவித்தனர்.

அதே போல ரவிச்சந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், வாசிம் ஜாஃபர் போன்ற இந்திய நட்சத்திரங்களும் இயற்கை எழுதிய அவருடைய குடும்பத்திற்கு இரங்கல் செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டனர். ஆனால் கடைசியில் மெகா டிவிஸ்ட் போல ஹெத் ஸ்ட்ரீக் இன்னும் இயற்கை எய்தவில்லை நம்மிடையே இந்த உலகில் தான் இருக்கிறார் என்று ஹென்றி ஒலங்கா மீண்டும் தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த செய்திகளை போலி என்று நிரூபித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தம்முடைய நண்பர் ஹெத் ஸ்ட்ரீக்குடன் இந்த செய்தியை பற்றி வாட்ஸ்அப் செயலியில் உரையாடியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ஹெத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். இதை நான் அவரிடமிருந்து கேள்விப்பட்டேன். அவரை 3வது நடுவர் திரும்ப அழைத்துள்ளார். அவர் தற்போது உயிருடன் இருக்கிறார் மக்களே” என்று சிரித்துக் கொண்டே செய்திகளை கலாய்க்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அண்டர்டேக்கர் போல ஸ்ட்ரீக் திரும்ப வந்து விட்டதாக சமூகவலைதளங்களில் பாராட்டி நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். அதே சமயம் உண்மையான செய்தியை தெரியாமல் ஏன் முதலில் தவறாக பதிவிட்டீர்கள் என்றும் அவரை ரசிகர்கள் சாடி வருகின்றனர். மேலும் ஒருவருடைய உயிர் பற்றிய விஷயத்தில் உண்மையை பற்றி உறுதியாக தெரிந்து கொள்ளாமல் போலியான செய்திகளை பரப்பிய செய்தி நிறுவனங்களையும் ரசிகர்கள் தற்போது கடுமையாக தாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:IND vs IRE : முதல் போட்டியை போன்றே இன்றைய மூன்றாவது போட்டியிலும் சிக்கல் இருக்காம் – அப்போ டாஸ் ரொம்ப முக்கியம்

அதனால் அந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டது தவறு தான் என்று சில நிறுவனங்கள் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டு வருகின்றன. அதே போல தம்முடைய இரங்கல் செய்தியை உடனடியாக டெலிட் செய்த வீரேந்திர சேவாக் “உண்மையான செய்தியை உறுதிப்படுத்தியதற்கு நன்றி ஹென்றி. ஸ்ட்ரீக்கின் மறைவை எமதர்மராஜா தள்ளிப் போட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தமக்கே உரித்தான பாணியில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement