SRH vs RCB : என்ன ஒரு க்ளாஸ் பேட்டிங் – ஆர்சிபி’க்கு மாபெரும் சவாலை கொடுத்த ஹைதெராபாத் வீரரை பாராட்டிய சச்சின், ஏபிடி

Heinrich Klassen
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற முக்கியமான 65வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. அதில் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை நழுவ விட்ட ஹைதராபாத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு களமிறங்கியது. ஆனால் பெங்களூரு தோற்றால் சென்னை, லக்னோ, மும்பை போன்ற அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இதர அணி ரசிகர்களிடையேயும் இந்த போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு தடுமாற்றமாகவே செயல்பட்ட தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மாவை 11 (14) ரன்களில் 5வது ஓவரில் அவுட்டாக்கிய மைக்கேல் பிரேஸ்வெல் அதே ஓவரில் ராகுல் திரிபாதியையும் 15 (12) ரன்களில் காலி செய்தார். அதனால் 28/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் – ஹென்றிச் க்ளாஸென் ஆகிய தென்னாபிரிக்க வீரர்கள் நங்கூரத்தை போட்டு சரிவை சரி செய்ய போராடினர்.

- Advertisement -

அட்டகாசமான சதம்:
அதில் ஒருபுறம் மார்க்கம் மிகவும் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஹென்றிச் க்ளாஸென் பெங்களூரு பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்து அரை சதமடித்தார். ஆனால் மறுபுறம் அவருடன் பெயருக்காக மட்டும் 13 ஓவர்கள் வரை நிலைத்து நின்ற கேப்டன் மார்க்ரம் 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் ஒரு பவுண்டரியும் அடிக்காமல் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

ஆனாலும் அந்த அழுத்தம் ரன்ரேட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாத அளவுக்கு எதிர்ப்புறம் மிரட்டலாக பேட்டிங் செய்த க்ளாஸென் நேரம் செல்ல செல்ல அதிரடி சரவெடியாக விளையாடி 8 பவுண்டரி 6 சிக்சருடன் தனது முதல் ஐபிஎல் சதமடித்து 104 (51) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹரி ப்ரூப் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27* (19) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் 186/5 ரன்கள் குவித்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

முன்னதாக இந்த சீசனில் ஆரம்பம் முதலே தடுமாறிய ஹைதராபாத் பேட்டிங் வரிசையில் பெரும்பாலான போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த க்ளாஸென் இந்த கடைசி சமயத்தில் சிறப்பான சதமடித்துள்ளது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக இந்த போட்டியில் சிறப்பான ஃபுட் ஒர்க் பயன்படுத்தி கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய அவருடைய பேட்டிங் சமீபத்தில் நான் பார்த்ததிலேயே மிகவும் சிறந்தது என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

அதே போல ஸ்பின்னர்களை க்ளாஸென் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு பேட்டிங் செய்ததாக தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தனது நாட்டு வீரரை பாராட்டியுள்ளார். இருப்பினும் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோன இந்த நிலைமையில் சதமடித்த அவர் ஹைதராபாத் அணிக்கு பெரிய பலனை ஏற்படுத்த முடியாது என்றாலும் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடும் பெங்களூருவின் வெற்றியை சிதைக்கும் அளவுக்கு செயல்பட்டுள்ளது அந்த அணி ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இதையும் படிங்க: SRH vs RCB : என்ன ஒரு க்ளாஸ் பேட்டிங் – ஆர்சிபி’க்கு மாபெரும் சவாலை கொடுத்த ஹைதெராபாத் வீரரை பாராட்டிய சச்சின், ஏபிடி

ஆனாலும் பேட்டிங்க்கு சாதகமான ஹைதராபாத் மைதானத்தில் மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்களை கொண்ட பெங்களூரு இந்த இலக்கை எட்டிப் பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளப் போராடி வருகிறது.

Advertisement