
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அக்சர் பட்டேல் தலைமையில் பங்கேற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது தாங்கள் விளையாடிய 14 லீக் ஆட்டங்களில் 7 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளுடன் 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
அதிலும் குறிப்பாக இந்த தொடரின் முதல் 8 ஆட்டங்களில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று அபாரமாக இந்த தொடரை துவங்கிய டெல்லி அணியானது மிக எளிதாக முதல் இரண்டு இடங்களுக்குள் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து பிளேஆப் சுற்று வாய்ப்பினை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாம் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் தொடர் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் பிளஆப் சுற்று வாய்ப்பை கூட எட்டாமல் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் இந்த தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் 10.75 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வேகப்பந்து வீச்சாளரான டி நடராஜன் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியது ஏன்? என்ற கேள்வி அதிகளவில் இருந்து வருகிறது.
இருப்பினும் அந்த அணியில் ஏற்கனவே ஸ்டார்க், முகேஷ் குமார், மோகித் சர்மா என திறமையான வேகப்பந்து வீச்சாளர்களும், அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் இருந்ததாலே அவருக்கு இடம் கிடைக்காமல் போனதாகவும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் டி நடராஜன் திறமையான வேகப்பந்து வீச்சாளராக இருந்தும் அவருக்கு ஏன் அதிகளவில் வாய்ப்பு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வழங்கப்படவில்லை? என்பது குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளரும், முன்னாள் தமிழக வீரருமான ஹேமங் பதானி தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஏன் ஒரு வீரருக்கு 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கி விளையாட வைக்காமல் இருக்கப்போகிறேன். மிடில் மற்றும் இறுதி ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசுவார் என்று நினைத்தே அவரை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தோம். ஆனால் நடராஜன் இந்த தொடரில் காயத்திலிருந்து மீண்டு வந்து முழு உடற்தகுதியுடன் தயாராகவில்லை.
இதையும் படிங்க : தோனி, யுவ்ராஜ் சிங் தான் இந்த விடயத்தில் பெஸ்ட்.. ஷ்ரேயாஸ் ஐயரால் அது முடியாது – மீண்டும் விமர்சித்த யோக்ராஜ் சிங்
கடைசி வரை அவர் இந்த தொடரில் காயத்துடன் தான் பயணித்திருந்தார். அதன் காரணமாகவே அவரை நாங்கள் அதிகளவில் போட்டிகளில் விளையாட வைக்க முடியவில்லை என ஹேமங் பதானி கூறியது குறிப்பிடத்தக்கது.