ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டியில் லக்னோ அணியை வெறும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. மார்ச் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 75, மிட்சேல் மார்ஷ் 72 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 65-5 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அசுடோஸ் சர்மா லக்னோ பவுலர்களை அடித்து நொறுக்கி 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 66* (31) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் திரிஷ்டன் ஸ்டப்ஸ் 34, விப்ராஜ் நிகாம் 39 ரன்கள் அடித்து கை கொடுத்தனர்.
காயத்தை தாண்டி மிரட்டல்:
அதனால் 19.3 ஓவரில் 211/3 ரன்கள் எடுத்த டெல்லி ஐபிஎல் தொடரில் தங்களுடைய அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அசுடோஸ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆரம்பத்தில் விக்கெட்டுகள் இழந்ததால் நிதானமாக விளையாடிய அவர் முதல் 20 பந்துகளில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆனால் அதன் பின் பொறுத்தது போதும் என்ற வகையில் பொங்கியெழுந்த அவர் அடுத்த 11 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசால்டாக 3 பந்துகள் மீதம் வைத்து போட்டியை ஃபினிஷிங் செய்தார். அவருடைய ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைவிரலில் வெட்டுப்பட்ட காயம் இருந்ததால் இப்போட்டியில் அசுடோஸ் விளையாடுவது சந்தேகமாக இருந்ததாக டெல்லி பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.
கோச் பாராட்டு:
இருப்பினும் காயத்தைப் பொருட்படுத்தாமல் விளையாடிய அவருக்கு பதானி தெரிவித்த பாராட்டு பின்வருமாறு. “இந்தப் பையனை பற்றி நான் குறிப்பிட வேண்டும். அவர் தனது விரலில் வெட்டுக் காயத்தைக் கொண்டுள்ளார். அதனால் முதல் போட்டியில் அவர் தவற விடுவதற்கான வாய்ப்பிருந்தது. அப்போது 2 நாட்கள் முன்பாக எப்போது காயத்தைச் சந்தித்தீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்? விளையாட முடியுமா என்று அவரிடம் கேட்டேன்”
இதையும் படிங்க: பர்ஸ்ட் கஷ்டமாதான் இருந்தது.. அப்புறம்.. சாம்பியன்ஸ் டிராபி நீக்கம் குறித்து மனம்திறந்த – முகமது சிராஜ்
“அப்போதே நான் மிடில் ஆர்டரில் விளையாட விரும்புகிறேன் என்பதை அவர் தெளிவாக சொல்லி விட்டார். மிடில் ஆர்டரில் இருப்பதற்கும் மிடில் ஆர்டர் தான் வேண்டும் என்று சொல்லி அங்கே சென்று விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்த அவர் பின்னர் 31 பந்தில் 66 ரன்களை அடித்து ஆட்டத்தை ஸ்டைலாக முடித்தார்” என்று சொன்னதும் டெல்லி அணியினர் கைதட்டி அசுட்டோஸை பாராட்டினர்.



