நானும் எவ்வளவோ சிக்ஸர் அடிச்சுருக்கேன் ஆனால் – விராட் கோலியை நேரடியாக வியந்து பாராட்டி பாண்டியா பேசியது என்ன

Hardik Pandya Virat Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானை தன்னுடைய முதல் போட்டியில் எதிர்கொண்ட இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவின் கதை முடிந்ததாகவே இந்திய ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி ஆகியோர் நங்கூரத்தை போட்டு 113 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள்.

அதில் பொறுப்புடன் விளையாடி வெற்றியை உறுதி செய்த பாண்டியா 40 (37) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஃபினிஷிங் செய்ய தவறியதுடன் தேவையின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றதால் ஏற்பட்ட பரபரப்பில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் அதே தவறை செய்யாமல் உள்வட்டத்திற்குள் பீல்டர்கள் இருந்தும் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் அபார வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்விக்கு பாகிஸ்தானை பழி தீர்த்தது.

- Advertisement -

அந்த 2 சிக்ஸர்கள்:
அப்படி அசாத்தியமான வெற்றி பெறுவதற்கு 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் நேரம் செல்ல செல்ல அதிரடி காட்டிய அவர் ஷாஹீன் அஃப்ரிடி வீசிய 18வது ஓவரில் 3 பவுண்டரிகளையும் ஹரிஷ் ரவூப் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர்களையும் கடைசி ஓவரில் நோ பாலை கச்சிதமாகப் பயன்படுத்தி சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு முன்னதாகவே தீபாவளி பரிசளித்தார். முன்னதாக அவரது ஆட்டத்தை எதிர்ப்புறமிருந்த பார்த்த ஹர்திக் பாண்டியா சுமார் 150 கி.மீ வேகத்தில் ஹரிஷ் ரவூப் வீசிய 19வது ஓவரில் பறக்க விட்ட அசால்ட்டான 2 சிக்சர்களை விராட் கோலியை தவிர்த்து தாம் உட்பட யாராலும் அடிக்க முடியாது என்று வியந்து பாராட்டியுள்ளார்.

இது பற்றி போட்டி முடிந்த பின் அவர்கள் இருவரும் இணைந்து பேசிய பேட்டியில் பாண்டியா பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அடித்த அந்த 2 ஷாட்கள் எவ்வளவு முக்கியமென்று எனக்கு தெரியும். ஒரு வேளை அதை தவற விட்டிருந்தால் பாகிஸ்தான் நம்மை ஏறி மிதித்திருக்கும். நானும் எத்தனையோ சிக்சர்களை அடித்துள்ளேன். ஆனால் அவர் அடித்த அந்த 2 சிக்சர்கள் மிகவும் ஸ்பெஷலானது. அதனாலேயே நாங்கள் இருவரும் அதை கொண்டாடினோம்”

- Advertisement -

“அப்போது நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன் ஆனால் மிஸ்டர் கோலியை தவிர்த்து வேறு யாரும் அந்த சிக்சர்களை அடிக்க முடியாது என்று நேரிடையாக நான் அவரிடம் கூறினேன். இந்த போட்டியில் நாங்கள் ஆரம்பத்திலேயே இருவரும் சேர்ந்து தடுமாறினோம். ஒரு வேளை இப்போட்டியில் நாங்கள் வந்ததுமே சிக்சர்கள் அடித்து வெற்றி பெற்றிருந்தால் கூட இந்த வெற்றி இவ்வளவு ஸ்பெஷலாக இருக்காது. அது எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் தொடர்ந்து பேசினோம். இங்கே பாகிஸ்தான் பந்து வீச்சையும் நாம் பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்” என்று கூறினார்.

அதற்கு நன்றி தெரிவித்து விராட் கோலி பேசியது பின்வருமாறு. “அந்த பார்ட்னர்ஷிப்பில் ஹர்திக் பாண்டியா பயமின்றி செயல்பட்டார். அவர் ஒவ்வொரு தருணத்திலும் பேசிப்பேசி கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்வோம் பின்பு என்னாகிறது என்று பார்ப்போம் என ஆரம்பத்திலேயே என்னிடம் கூறினார். அவர் என்னை கவனத்துடன் செயல்பட உதவினார். ஏனெனில் ஏற்கனவே 4 விக்கெட்டுகளை இழந்ததால் சில நேரங்களில் நான் பெரிய ஷாட் அடித்து ரிஸ்க் எடுக்க முயற்சித்தேன். அது ஆபத்தானதாக அமைந்திருக்கலாம்” என்று கூறினார். மேலும் இப்படி சுதந்திரமாக விளையாடுவதற்கு அணி நிர்வாகமும் தங்களுக்கு முழுமையான ஆதரவு கொடுத்ததாக விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement