38 வயதான இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் தோனி ஆடவில்லை. அவர் சொந்த வேலைகளையும், அவருக்கு பிடித்த ராணுவ வேலையையும் கவனித்து வந்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு திரும்ப அவர் நினைத்தாலும் அவருக்கு அணியில் கிடைக்கவில்லை.
அதேநேரத்தில் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் ஆடுவதும் அவரது கனவாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி விட்டால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்ற கனவுடன் வலம் வந்தார் தோனி. அவர் சரியாக தனது முடிவை தெரிவிக்காததால் பிசிசிஐ அவரை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரும் தள்ளிப்போனது, கிட்டத்தட்ட ரத்து செய்யப்படும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இதனால் தோனியின் எதிர்காலம் முற்றிலும் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இது குறித்து பேசி உள்ள பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கூறியதாவது :
தோனி இந்திய அணியில் மீண்டும் விளையாடுவது குறித்த கனவுகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். ஐபிஎல் தொடரில் பிரமாதமாக அவர் ஆடியிருந்தால் இந்திய அணியில் இடம்பிடிக்கும் கனவு நிறைவேற வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தற்போது அதற்கும் வாய்ப்பு இல்லை.
தோனி தற்போது அந்த நிலைமையை கடந்துவிட்டார். அவரின் வாய்ப்புக்கான சாத்தியம் அனைத்தும் மங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். இப்போது அவரின் நிலைமை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர் இந்தியாவிற்கு இனிமேல் ஆடுவது சாத்தியமற்ற காரியம் என்று கூறியுள்ளார் ஹர்ஷா போக்ளே.
அவரின் இந்த கருத்தின் மூலம் தோனியின் ரசிகர்கள் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஏற்கனவே தோனி ஓய்வு குறித்து யோசிக்க ஆரம்பித்து விட்டார் என்றும் அவரது நண்பர்கள் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.