ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இம்முறை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடிய சென்னை 14 போட்டிகளில் 7 வெற்றியையும் 7 தோல்வியையும் பதிவு செய்தது. குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது.
அதனால் வரலாற்றில் மூன்றாவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பை நழுவ விட்டது. மறுபுறம் ஆரம்பத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்த பெங்களூரு அதன் பின் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்றது. அதனால் சென்னைக்கு எதிரான வெற்றியை ஆர்சிபி வீரர்கள் வெறித்தனமாக மைதானத்தில் கொண்டாடித் தீர்த்தனர்.
சாடிய போக்லே:
அப்போது போட்டி முடிந்ததும் வழக்கம் போல கை கொடுப்பதற்காக தோனி தலைமையில் சிஎஸ்கே வீரர்கள் வரிசையாக சென்றனர். ஆனால் ஆர்சிபி வீரர்கள் மைதானத்தின் மறு பக்கத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ஏற்கனவே தோல்வியை சந்தித்த வெறுப்பில் இருந்த தோனி நாம் சிஎஸ்கே கேப்டன் இல்லை என்பதை உணர்ந்து ருதுராஜை வரச்சொல்லி விட்டு ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே அங்கிருந்து கோபத்துடன் கிளம்பினார்.
ஆனால் அதை உல்டாவாக மாற்றிய ஆர்சிபி ரசிகர்கள் ஜென்டில்மேன் விளையாட்டில் இப்படி கை கொடுக்காமல் போகலாமா? என்று தோனியை விமர்சித்து வருகின்றனர். அதற்கு “இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனிக்கு கை கொடுத்துவிட்டு பின்னர் ஆர்சிபி வீரர்கள் கொண்டாடியிருக்கலாம்” என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார்.
அந்த வரிசையில் இணைந்துள்ள இந்தியாவின் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே உலகக் கோப்பையே வென்றாலும் எதிரணிக்கு கை கொடுத்துவிட்டு பின்னர் கொண்டாடியிருக்கலாம் என்று ஆர்சிபி வீரர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே தோனியை குறை சொல்லாதீர்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அது முக்கியம் கிடையாது”
இதையும் படிங்க: சிஎஸ்கே – ஆர்சிபி போட்டியில் கண்ணீர் விட்ட ராயுடு.. வாழ்த்து சொன்னதுக்கு கலாய்த்த வருண் ஆரோன்
“உலகக்கோப்பை ஃபைனலில் நீங்கள் வென்றால் உங்களுடைய எமோஷன்களை காட்டலாம். ஆனால் அப்போதும் கூட நீங்கள் எதிரணியுடன் கை குலுக்க வேண்டும். அந்த கைக்குலுக்கல் என்பது “இப்போது எங்கள் விரோதம் முடிந்து விட்டது என்பதற்கான அடையாளமாகும். நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்காமல் விளையாடினோம். ஆனால் அது முடிந்து விட்டது” என்று சொல்லாமல் செல்வதற்கான அடையாளமாகும்” எனக் கூறினார்.



