ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடிய சென்னை 14 போட்டிகளில் 7 வெற்றியும் 7 தோல்வியும் பதிவு செய்தது. குறிப்பாக பெங்களூருவுக்கு அணிக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது.
அதனால் 2020, 2022 சீசன்களை தொடர்ந்து வரலாற்றில் 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை சாம்பியன் பட்டத்தையும் தக்க வைக்காமல் கோட்டை விட்டது. முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 219 ரன்களை துரத்திய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் 0, துபே 7, மிட்சேல் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் ரச்சின் ரவீந்தரா 62, ஜடேஜா 42*, ரகானே 33, தோனி 25 ரன்கள் எடுத்தும் சென்னை பரிதாபமாக தோற்றது.
ராயுடுவின் கண்ணீர்:
குறிப்பாக யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் 110 மீட்டர் மெகா சிக்சர் அடித்த தோனி வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த பந்திலேயே அவர் அவுட்டானது சிஎஸ்கே ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ஹிந்தி வர்ணனை அறையில் நேரடியாக பார்த்த ராயுடு தோல்வியை தாங்க முடியாமல் வாய் மீது கை வைத்து கண்ணீர் விட்டார்.
2018, 2021, 2023 ஆகிய வருடங்களில் சிஎஸ்கே 3 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஓய்வு பெற்றாலும் மனதளவில் சென்னை அணியின் ரசிகராகவும் ஆதரவாளராகவும் இருக்கிறார். அதனாலயே அவர் இப்படி சோகத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம். இருப்பினும் தொடர்ந்து நடைபெற்ற வர்ணனையில் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்த ராயுடு வாழ்த்தி பேசியது பின்வருமாறு.
“இந்த வெற்றியின் எதிர்வினை பெங்களூரு தெருக்களில் என்ன என்பதை நாங்கள் பார்த்தோம். உண்மையில் சிஎஸ்கே தங்களிடம் உள்ள 5 கோப்பைகளில் ஒன்றை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போது தான் ஆர்சிபி ரசிகர்கள் கோப்பையுடன் அணி வகுத்து கொண்டாட்டத்திற்கு செல்வார்கள்” என்று கூறினார். அப்போது அருகில் இருந்த மற்றொரு முன்னாள் வீரர் வருண் ஆரோன் பதிலளித்தது பின்வருமாறு.
இதையும் படிங்க: பெங்களூரு வீரர்களுக்கு கைகொடுக்காமலே தோனி ஓய்வறைக்கு செல்ல என்ன காரணம்? – விவரம் இதோ
“உண்மையில் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை நாக் அவுட் செய்து விட்டது என்பதை இவரால் அஜீரணிக்க முடியவில்லை” என்று சொல்லி கலாய்த்தார். இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்சிபி தகுதி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.



