கடைசி டெஸ்டிலும் பாகிஸ்தான் திணறல், ஜாம்பவான் டேவிட் கோவரை மிஞ்சிய இங்கிலாந்தின் விராட் கோலி – 39 வருட புதிய சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை வென்ற கையோடு பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 2 – 0* என்ற கணக்கில் ஏற்கனவே கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் அதிரடி அணுகுமுறையுடன் விளையாடி வரும் அந்த அணி உலக அளவில் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அந்த நிலைமையில் டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் துவங்கிய சம்பிரதாய கடைசி போட்டியில் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் நோக்கத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் சபிக் 8, ஷான் மசூட் 30 என தொடக்க வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் அசாமுடன் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்த அசார் அலி தனது கடைசி போட்டியில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் ஷாகீல் 23 ரன்களும் முகமத் ரிஸ்வான் 19 ரன்களும் எடுத்து அவுட்டாகி சென்ற நிலையில் மறுபுறம் போராடிய கேப்டன் பாபர் அசாமும் 78 ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

இங்கிலாந்தின் கோலி:
அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் முடிந்தளவு போராடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் பென் டன்கட் 26, ஓலி போப் 51, பென் ஸ்டோக்ஸ் 26 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

இருப்பினும் 6வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இளம் வீரர் ஹரி ப்ரூக் சதமடித்து 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 111 ரன்களில் அவுட்டானார். அவருடன் அசத்திய பென் போக்ஸ் தனது பங்கிற்கு 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில் மார்க் வுட் 35, ஓலி ராபின்சன் 29 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை குவித்ததால் தப்பிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 354 ரன்களுக்கு அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது மற்றும் நௌமன் அலி தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அப்போது 2வது நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.அதை விட இப்போட்டியில் சதமடித்த ஹாரி ப்ரூக் இத்தொடரின் 3 போட்டிகளிலும் தொடர்ந்து சதங்களை அடித்து ஹாட்ரிக் சதங்களை விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக அசத்தியதால் சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதிரடியாக செயல்பட்ட இவர் இந்த பாகிஸ்தான் தொடரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அதில் இதுவரை களமிறங்கிய 5 இன்னிங்ஸில் முறையே 153, 87, 9, 108, 111 என 3 சதங்களையும் 1 அரை சதமும் விளாசியுள்ள அவர் 468* ரன்களை குவித்துள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற ஜாம்பவான் டேவிட் கோவரின் 39 வருட சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹரி ப்ரூக் : 468*, 2022/23
2. டேவிட் கோவர் : 449, 1983/84
3. டெனிஸ் அமிஸ் : 406, 1972/72
4. மைக்கேல் அதர்டன் : 341, 2000/01
5. ஜெப்ரி பாய்காட் : 329, 1977/78

இதையும் படிங்க: என்னடா இது நம்ம அஷ்வினுக்கு வந்த சோதனை? முதலாவது போட்டியில் நடந்த சம்பவத்தை – கவனிச்சீங்களா?

அப்படி டி20 கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அசத்தலாக பேட்டிங் செய்யும் இவர் இளம் வயதிலேயே இந்த அளவுக்கு வெளுத்து வாங்கி இங்கிலாந்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மனாக அவதரித்துள்ளார். அதனாலேயே இந்தியாவின் விராட் கோலி போல டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே நேரத்தில் அசத்தும் திறமை இவரிடம் இருப்பதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக பாராட்டினார். தற்போது அதற்கேற்றார் போல் மீண்டும் அசத்தும் இவர் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

Advertisement