- Advertisement -
உலக கிரிக்கெட்

2 ரன்ஸ் வித்யாசம்.. ஆஸிக்கு எதிராக விராட் கோலியின் சாதனை உடைத்த ஹரி ப்ரூக்.. புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது. அதனால் 2 – 2 என்ற கணக்கில் சமனில் இருக்கும் அத்தொடரின் கடைசி போட்டி செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது.

இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் – பிலிப் சால்ட் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியாவை அதிரடியாக எதிர்கொண்டனர்.

- Advertisement -

ஹரி ப்ரூக் அசத்தல்:

அந்த வகையில் 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் பிலிப் சால்ட்டை 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 45 (27) ரன்களில் அவுட்டாக்கிய ஆரோன் ஹார்டி அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸை டக் அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹரி ப்ரூக் தம்முடைய பங்கிற்கு ஆஸ்திரேலியாவை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார்.

பென் டக்கெட்டுடன் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 3 பவுண்டரி 7 சிக்ஸருடன் அரை சதமடித்து 72 (52) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் 6, லிவிங்ஸ்டன் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய பென் டக்கெட் சதமடித்து 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் 107 (91) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

விராட் கோலியை முந்தி:

இறுதியில் ஜேக்கப் பேத்தல் 13, அடில் ரசித் 36 ரன்கள் எடுத்தும் 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 309 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக இந்த தொடரின் 5 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹரி ப்ரூக் 312 ரன்களை 127.86 ஸ்ட்ரைக் ரேட்டில் 78 சராசரியில் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: 3 பேர் போதும்.. பும்ரா முக்கியம்.. ஐபிஎல் 2025இல் மும்பை அவரை கழற்றி விடலாம்.. அஜய் ஜடேஜா ஓப்பன்டாக்

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற இந்தியாவின் விராட் கோலியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2018ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி 310 ரன்களை 62 சராசரியில் குவித்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அதை 2 ரன் வித்தியாசத்தில் ஹரி ப்ரூக் உடைத்துள்ளார். அதே பட்டியலில் ஜாம்பவான் தோனி 2009 தொடரில் 285 ரன்கள் குவித்து 3வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -