ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஐபிஎல் 2025 தொடருக்கான விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி ஒரு அணியால் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் கார்ட்டை பயன்படுத்தி வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏலத்திற்கு முன்பாக எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மாவை கழற்றி விடுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் 2024 சீசனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை மும்பை நிர்வாகம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கியது.
பாண்டியா முக்கியமல்ல:
அத்துடன் குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை தங்களது புதிய கேப்டனாக அறிவித்தது. அது மும்பை ரசிகர்களிடமே உச்சகட்ட கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்புக்கு மத்தியில் பாண்டியா தலைமையில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் ரோஹித், சூரியகுமார், பும்ரா ஆகியோர் தான் மும்பை தக்க வைக்க வேண்டிய டாப் 3 வீரர்கள் என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். அத்துடன் பாண்டியாவை விட பும்ரா தான் மதிப்புள்ள முக்கியமான வீரர் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே பாண்டியாவை கழற்றி விட்டு ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கும் அஜய் ஜடேஜா இது பற்றி பேசியது பின்வருமாறு.
ஜஸ்ப்ரித் பும்ரா முக்கியம்:
“ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் மும்பை தக்க வைக்க வேண்டிய 3 வீரர்கள் என்று நான் சந்தேகமின்றி சொல்வேன். இந்த 3 வீரர்களையும் ஏலத்தில் விடுவது அசாத்தியமற்றது. வேண்டுமானால் பாண்டியாவுக்கு மும்பை ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். அவரும் ஏலத்தில் விட்டால் வாங்க முடியாத வீரராக உள்ளார். இருப்பினும் அடிக்கடி காயத்தை சந்திக்கும் அவரை பெரிய தொகை கொடுத்து வாங்க மற்ற அணிகள் தயங்கலாம்”
இதையும் படிங்க: வருண் சக்ரவத்தியால் இந்திய அணியில் வாய்ப்பை இழந்த மூத்த அனுபவ வீரர் – விவரம் இதோ
“எனவே அவருக்காக ஆர்டிஎம் வைத்திருந்தால் அதை மும்பை பயன்படுத்தலாம். இது ஒரு வீரரின் நட்சத்திர அந்தஸ்து அல்லது பவரை பொறுத்து முடிவு செய்யப்பட ஒன்று என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் தற்போதைய மார்க்கெட்டில் ஹர்திக் பாண்டியாவை விட பும்ரா அதிக மதிப்பை கொண்டுள்ளார். அவரை வெளியிட்டால் மீண்டும் பெறுவது கடினமான வியாபாரமாகி விடும்” என்று கூறினார்.



