21/3 டூ 315/3 நியூஸிலாந்தை விளாசிய இங்கிலாந்து – வினோத் காம்ப்ளி, கவாஸ்கர், ப்ராட்மேன் மிஞ்சிய இளம் வீரர் புதிய சாதனை

Harry Brook
Advertisement

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்து விட்ட நடப்பு சாம்பியன் நியூசிலாந்துக்கு எதிராக தாமும் ஃபைனல் வாய்ப்பை கோட்டை விட்ட இங்கிலாந்து இத்தொடரில் தங்களது பலத்தை சோதிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியின் முதல் நாளிலேயே 58.2 ஓவரிலேயே 325/9 ரன்கள் குவித்து டிக்ளர் செய்த இங்கிலாந்து இறுதியில் 267 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த நிலையில் சொந்த மண்ணில் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முயற்சியுடன் பிப்ரவரி 24ஆம் தேதியன்று பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 2, பென் டூக்கெட் 9, ஓலி போப் 10 என டாப் ஆடர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே நியூசிலாந்தின் ஸ்விங் பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அப்போது களமிறங்கிய இளம் வீரர் ஹரி ப்ரூக்குடன் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சரிவை சரி செய்ய போராடினார்.

- Advertisement -

அபார சாதனை:
அதில் ஒருபுறம் ஜோ ரூட் வழக்கம் போல நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் மறுபுறம் ப்ரூக் தமக்கே உரித்தான பாணியில் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் முதல் ஆளாக தன்னுடைய 4வது சதத்தை விளாசினார். இடையே மழை வந்து ஓய்ந்தாலும் மறுபுறம் ஓயாமல் அதிரடி காட்டிய அவருக்கு ஓரளவு ஈடு கொடுத்த ஜோ ரூட் மெதுவாக பேட்டிங் செய்து 7 பவுண்டரியுடன் சதமடித்தார்.

அப்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த போது ஒரு கட்டத்தில் 6.4 ஓவரில் 21/3 என திண்டாடிய இங்கிலாந்து 4வது விக்கெட்டுக்கு 294 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியால் 315/3 ரன்களை குவித்து மீண்டும் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் தெறிக்க விட்டு வருகிறது. களத்தில் ரூட் 101* (182) ரன்களுடனும் ப்ரூக் 184* (169) ரன்களுடனும் உள்ளனர். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது அதிரடியான அணுகுமுறையால் உலகின் பல அணிகளையும் மிரட்டி வரும் இங்கிலாந்து தற்போது நியூசிலாந்து மண்ணிலும் 15 வருடங்கள் கழித்து முதல் வெற்றியை பதிவு செய்து இத்தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்றும் வாய்ப்பை ஆரம்பத்திலேயே பிரகாசப்படுத்தியுள்ளது.

- Advertisement -

முன்னதாக சமீப காலங்களில் இங்கிலாந்தின் இந்த அதிரடியான வெற்றி நடைக்கு இளம் வீரர் ஹரி ப்ரூக் முக்கிய காரணமாக செயல்பட்டு வருகிறார். 2022 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அதிரடியாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர் கடந்த 2022 ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது முதலே பெரும்பாலான தருணங்களில் அதிரடியாக விளையாடி வரும் அவர் இப்போட்டியில் 24 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் தெறிக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

- Advertisement -

அதை விட இதுவரை களமிறங்கிய 9 இன்னிங்ஸில் 807 ரன்களை 100.88 என்ற அபாரமான சராசரியில் 99.38 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 9 இன்னிங்ஸில் 800+ ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹரி ப்ரூக் : 807*
2. வினோத் காம்ப்ளி : 798
3. ஹெர்பர்ட் சுட்கிளிப் : 780
4. சுனில் கவாஸ்கர் : 778
5. எவர்டன் வீக்ஸ் : 777

இதையும் படிங்க: IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட நான் தயார் – ஆஸி வீரர் அறிவிப்பு

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 800 ரன்கள் அடித்த வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர் என்ற ப்ராட்மேன் சாதனையை உடைத்துள்ள அவர் மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹரி ப்ரூக் : 100.87*
2. டான் ப்ராட்மேன் : 99.94
3. சிட்னி பேர்ன்ஸ் : 63.05

Advertisement