
ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளார்கள். குறிப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரின் 2வது போட்டியில் அந்த இருவரும் சுமாராக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார்கள்.
அதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ரோஹித் சர்மா 31வது இடத்திற்கு சரிந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் உலகின் டாப் 6வது பேட்ஸ்மேனாக ஜொலித்து வந்த அவர் கடந்த நியூசிலாந்து தொடரிலும் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதன் காரணமாக 2 மாதங்களுக்குள் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள ரோகித் 31வது இடத்திற்கு சரிந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
அதே போல முதல் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி மீண்டும் 2வது போட்டியில் சொதப்பியதால் தற்போது 20வது இடத்திற்கு சரிந்துள்ளார். செப்டம்பர் மாதம் உலகின் 8வது பேட்ஸ்மேனாக ஜொலித்த அவரும் தற்போது 20வது இடத்திற்கு சென்று பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளார். ஆனால் சுப்மன் கில் 17வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் ரிஷப் பண்ட் 9வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
ஜெய்ஸ்வால் 2வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளார். மறுபுறம் நியூஸிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 123, 55 ரன்கள் குவித்த ஹரி ப்ரூக் இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஜோ ரூட்டை 2வது இடத்திற்கு தள்ளியுள்ள அவர் உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 38 இன்னிங்ஸில் 8 சதங்கள் உட்பட 2280 ரன்களை 61.62 சராசரியில் குவித்துள்ளார். அதனால் 27 மாதங்களிலேயே 24 வயதில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி ஹரி ப்ரூக் அபார சாதனை படைத்துள்ளார். டாப் 10 டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இதையும் படிங்க: ஒரே ஒரு பிளேயரை நம்பியிருக்கோம்.. அவரும் போய்ட்டா இந்தியாவின் தோல்வி கன்ஃபார்ம்.. ஃகைப் கவலை
அஸ்வின் 5, ஜடேஜா 6வது இடத்தில் நீடிக்கிறார்கள். டாப் 10 டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா நம்பர் ஒன் இடத்தில் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். அஸ்வின் 3, அக்சர் படேல் 9வது இடத்தில் நீடிக்கிறார்கள். டாப் 10 டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் அணி என்ற மகுடத்தை தக்க வைத்துள்ளது.