IND vs WI : மீண்டும் வீணான ஹர்மன்ப்ரீத் போராட்டம் – விராட் கோலி, ரோஹித்தை முந்தி புதிய வரலாற்று சாதனை

Harmanpreet Kaur Virat Kohli
- Advertisement -

வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் 2022 போட்டிகளில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. உலகின் டாப் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஜூலை 29 முதல் மோதிய லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியாவும் நியூசிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதற்கிடையே 3வது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த நியூசிலாந்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது.

அந்த நிலைமையில் தங்கப்பதக்கத்தை நிர்ணயிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு பர்மிங்காம் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 161/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீராங்கனை அலிசா ஹேலி 7 (12) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய பெத் மூனி மற்றும் கேப்டன் மெக் லென்னிங் ஆகியோர் 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். அதில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் லென்னிங் 36 (26) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தஹிலா மெக்ராத் மற்றும் ஹாரிஷ் ஆகியோர் தலா 2 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

போராடிய ஹர்மன்:
இருப்பினும் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த பெத் மூனி 8 பவுண்டரியுடன் 61 (41) ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் ரீச்சல் ஹெய்ன்ஸ் 18* (10) ரன்களை விளாசினார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரேணுகா சிங் மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் தங்கம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு நட்சத்திர தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 6 (7) ஷபாலி வர்மா 11 (7) என ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனால் 22/2 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் சக வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்கஸ் உடன் இணைந்து நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். 2-வது விக்கெட்டுக்கு முக்கியமான 96 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்திய இந்த ஜோடியில் 3 பவுண்டரியுடன் 33 (33) ரன்களில் ரோட்ரிகஸ் அவுட்டாக அடுத்து களமிறங்கிய பூஜா வஸ்திரகர் 1 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அந்த நிலைமையில் 7 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்கவிட்டு 65 (43) ரன்கள் குவித்து வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடிய ஹர்மன்பிரீட் கவூர் அவுட்டானது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனெனில் அடுத்து வந்த தீப்தி சர்மா 13 (8), ஸ்னே ராணா 8 (6) என அத்தனை வீராங்கனைகளும் ஆஸ்திரேலியாவின் தரமான பந்துவீச்சில் சொதப்பலாக செயல்பட்டு ஒற்றை இலக்க ரன்களில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினர். அதனால் 19.3 ஓவரில் 152 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்டு தோல்வியடைந்தது.

அதன் காரணமாக திரில் வெற்றி பெற்ற உலக டி20 உலக சாம்பியன் ஆஸ்திரேலியா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் வரலாற்றில் இது போல நிறைய போட்டிகளில் சொதப்பிய இந்தியா இந்த முக்கிய போட்டியிலும் சொதப்பி தோற்றதால் வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றது. அதனால் இந்த போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்களை விளாசி வெற்றிக்காக போராடிய போராட்டம் வீணானது. இதே தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியிலும் 52 (34) ரன்கள் விளாசி அவர் போராடிய போதிலும் அந்த போட்டியிலும் இதேபோல் இந்தியா தோல்வியடைந்தது.

விராட்டை முந்தி:
இதுபோக கடந்த 2017 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை 175 ரன்கள் விளாசி அபார சதமடித்து தோற்கடித்த ஹர்மன்பிரீத் கவுர்இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 81 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடிய போதிலும் எஞ்சிய வீராங்கனைகள் சொதப்பியதால் இதேபோல் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இருப்பினும் இந்த போட்டியில் 65 ரன்களை குவித்த அவர் ஆடவர் அல்லது மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் வரலாற்றுச் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ஹர்மன்பிரீட் கவூர்: 1571* ரன்கள்
2. விராட் கோலி : 1570 ரன்கள்
3. ரோகித் சர்மா : 1161* ரன்கள்
4. எம்எஸ் தோனி : 1112 ரன்கள்

Advertisement