டி20 உ.கோ’யில் ஷாஹீன் அஃப்ரிடியை விட அவர்தான் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார் – பாக் வீரர் பற்றி முன்னாள் வீரர் கணிப்பு

Shaheen-afridi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் பரம எதிரிகள் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எல்லைப் பிரச்சனை காரணமாக இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டுமே மோதுகின்றன. மேலும் கடந்த 1992 முதல் பங்கேற்ற அத்தனை உலக கோப்பை போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று வீரநடை போட்ட இந்தியாவை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் புதிய வரலாறு படைத்தது.

அதன்பின் அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் தோற்றாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் பைனலுக்கு கூட செல்லவிடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. எனவே அந்த 2 அவமான தோல்விகளுக்கு இம்முறை மெல்போர்ன் நகரில் நடைபெறும் போட்டியில் வென்று பழி தீர்க்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அப்ரிடி இல்ல:
மறுபுறம் கடந்த முறை வரலாற்று தோல்வியை சந்திக்க ஆட்டநாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அஃப்ரிடி சமீபத்திய ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை என்றாலும் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து உலக கோப்பையில் பங்கேற்க தயாராகி வருகிறார். குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 மாதங்கள் கழித்து பந்து வீசிய அவர் முதல் ஓவரிலேயே துல்லியமான யார்க்கர் பந்தை வீசி அந்த அணியின் முக்கிய வீரர் ரஹ்மதுல்லாஹ் குர்பாஸை எழுந்து நடக்க முடியாத அளவுக்கு காலை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பழைய பன்னீர் செல்வமாக பார்முக்கு திரும்பியுள்ளார்.

அதனால் ஏற்கனவே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திண்டாடக்கூடிய ரோகித், ராகுல், விராட் ஆகியோர் அடங்கிய இந்திய டாப் ஆர்டர் இம்முறையும் அவருக்கு எதிராக தடுமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காயத்திலிருந்து திரும்பியுள்ள அஃப்ரிடி 100% ஃபார்முக்கு திரும்ப இன்னும் சற்று நேரமாகும் என்பதால் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ் ரவூப் தான் அக்டோபர் 23இல் தேதியன்று இந்தியாவுக்கு சவாலை கொடுப்பார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் பவுலராக சாஹீன் அஃப்ரிடி இருக்க மாட்டார் என்று எனக்கு தோன்றுகிறது. மாறாக ஹரிஷ் ரவூப் தான் அங்கே இருப்பார். ஏனெனில் அஃப்ரிடி அவருடைய சிறந்த பார்முக்கு நெருங்கினாலும் இன்னும் முழுதாக தொடவில்லை. குறிப்பாக 23ஆம் தேதியன்று அவர் முழு பார்முக்கு திரும்பும் நாளாக இருக்காது. அதனால் ஹரீஸ் ரவூப் மிகவும் கடினமான ஓவர்களை வீசி வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை கொண்டவராக இருப்பார்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட காயமடைந்து திரும்பினால் ஒருசில போட்டிகள் முதல் ஒருசில மாதங்கள் வரை தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது வழக்கமாகும். அந்த நிலையில் காயங்களை சந்திக்காமல் தொடர்ச்சியாக விளையாடி வரும் ஹாரீஸ் ரவூப் தற்சமயத்தில் அஃப்ரிடியை விட நல்ல பார்மில் இருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 8 விக்கெட்டுகளை எடுத்த அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளராக சாதனை படைத்தார்.

அத்துடன் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து முத்தரப்பு தொடரின் பைனலில் இதர பாகிஸ்தான் பவுலர்களை காட்டிலும் 5.50 என்ற குறைவான எக்கனாமியில் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஏற்கனவே பிக்பேஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக மெல்போர்ன் மைதானத்தில் விளையாடிய அனுபவமும் கொண்டவர். எனவே அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி இம்முறை இந்தியாவுக்கு சவால் கொடுக்கும் வகையில் பந்து வீசுவேன் என்று ஏற்கனவே கடந்த மாதம் அவர் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement