- Advertisement -
இந்திய கிரிக்கெட்

6, 6, 6, 6, 6, 4.. ஒரே ஓவரில் 34 ரன்ஸ்.. 71/5 டூ 293.. தனியாளாக மாஸ் காட்டிய பாண்டியா.. விதர்பாவை விளாசி மிரட்டல் சதம்

இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை 2025/26 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் ஜனவரி 3ஆம் தேதி ராஜ்கோட்டில் எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் பரோடா மற்றும் விதர்பா அணிகள் மோதின. காலை 9 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பரோடா அணிக்கு ஓப்பனிங் வீரர்கள் அமித் பசி 0, நித்யா பாண்டியா 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அடுத்து வந்த ப்ரியான்ஸ் மோலியா 16, அடிட் சேத் 21 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தார்கள். போதாகுறைக்கு ஜிதேஷ் சர்மாவும் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 71/5 என பரோடா தடுமாறியது.

- Advertisement -

மாஸ் காட்டிய பாண்டியா:

அப்போது கேப்டன் க்ருனால் பாண்டியா நங்கூரமாக விளையாடி சரி செய்யப் போராடினார். அவருடன் ஜோடி சேர்ந்த சகோதரர் ஹர்திக் பாண்டியா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். 6வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் க்ருனால் 23 (50) ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அடுத்து வந்த விஷ்ணு சோளங்கி அதிரடியாக விளையாட முயற்சித்து 26 (17) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் நன்கு செட்டிலான ஹர்திக் பாண்டியா 66* (62) ரன்களை எடுத்து நிதானம் கலந்த அதிரடியை மட்டுமே வெளிப்படுத்தினார்.

- Advertisement -

மிரட்டல் சதம்:

ஆனால் அப்போது விதர்பா பவுலர் பர்த் ரேகாடே வீசிய 39வது ஓவரில் ஹர்திக் பாண்டியா முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அதோடு நிற்காத அவர் அடுத்த 2 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து 96 ரன்களை தொட்டார். கடைசிப் பந்திலும் அடிக்க முயற்சித்த அவருக்கு பவுண்டரி மட்டுமே கிடைத்தது. அந்த வகையில் 6, 6, 6, 6, 6, 4 என ஒரே ஓவரில் 34 ரன்களை குவித்த பாண்டியா வெறும் 68 பந்தில் மிரட்டலான சதமடித்தார்.

இதையும் படிங்க: விராட், ரோஹித் சொன்ன மாதிரி.. ஐபிஎல் தொடரில் அந்த ரூல் எனக்கும் பிடிக்கல.. அம்பயர் சைமன் பேட்டி

தொடர்ந்து அசத்திய அவர் 8 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 133 (92) ரன்களை 144.57 ரன்களை விளாசி அவுட்டானார். இறுதியில் ராஜ் லிம்பானி 10, மகேஷ் பிதியா 18*, கரண் உமட் 13* ரன்கள் அடுத்த உதவியுடன் 50 ஓவரில் பரோடா 293/9 ரன்களை குவித்த நிலையில் விதர்பாவுக்கு அதிகபட்சமாக யாஷ் தாகூர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தத்தில் இப்போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 30 ரன்கள் கூட தாண்டாத நிலையில் தனியாளாக மாஸ் காட்டிய பாண்டியா தம்முடைய அணியைக் காப்பாற்றி தரத்தை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -