இந்தியாவை அவமானத்திலிருந்து காப்பாற்றிய பாண்டியா.. சூர்யகுமார் – கம்பீரால் ஓமனிடம் சிக்கிய பரிதாபம்

Hardik Pandya
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது. அதனால் கடைசிப் போட்டிக்கு முன்பாகவே முதல் அணியாக இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி ஓமனுக்கு எதிராக இந்தியா தங்களுடைய கடைசிப் போட்டியில் விளையாடி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

ஆனால் அப்போட்டியில் சூரியகுமார் – கௌதம் கம்பீர் கத்துக்குட்டியான ஓமனை எப்படியும் வீழ்த்தி விடுவோம் என்று குறைத்து மதிப்பிட்டு வகுத்த திட்டங்கள் சொதப்பின. முதலாவதாக பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 38 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் கில் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

- Advertisement -

சூரியகுமார் – கம்பீர் சொதப்பல்கள்:

அதனால் மறுபுறம் நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் 56 (45) ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் அக்சர் படேல் 26, திலக் வர்மா 29 ரன்கள் எடுத்த போதிலும் சிவம் துபே 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஹர்ஷித் ராணா 13*, அர்ஷ்தீப் 1, குல்தீப் 1 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் சூரியகுமார் கடைசி வரை பேட்டிங் செய்ய வரவில்லை.

சூப்பர் 4 சுற்றுக்கு முன் பேட்டிங் வரிசையில் பலத்தை சோதிக்க அவர் செய்த சோதனையால் 200 ரன்கள் எடுக்கும் வாய்ப்பைத் தவற விட்ட இந்தியா 188/8 ரன்கள் மட்டுமே அடித்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த ஓமன் அணிக்கு 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த கேப்டன் ஜதிந்தர் 32 (33) ரன்களில் குல்தீப் சுழலில் போல்ட்டானார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அமைர் கலீம் – ஹமத் மிர்ஸா அதிரடியாக விளையாடினர்.

- Advertisement -

காப்பாற்றிய பாண்டியா:

அப்போது அந்த ஜோடியை சூரியகுமார் எளிதாக முறித்து விடலாம் என்று கருதினார். அதனால் திலக் வர்மா, சிவம் துபே, அபிஷேக் சர்மா போன்ற பகுதி நேர பவுலர்களிடம் அவர் பந்தைக் கொடுத்தார். அதைப் பயன்படுத்திய அந்த ஜோடி அபாரமாக விளையாடி 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பைக் காட்டியது என்றே சொல்லலாம்.

ஏனெனில் அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் 17.3 ஓவரில் 149/1 என்ற வலுவான நிலையைப் பெற்ற ஓமனின் வெற்றிக்கு கடைசி 3.3 ஓவரில் 39 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது ராணா வேகத்தில் கலீம் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் ஹர்திக் பாண்டியா வேகமாக அபாரமாக ஓடி சென்று கேட்ச் பிடித்தார். அதனால் கலீமை 64 (46) ரன்களில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய பாண்டியா அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அச்சுறுத்தலைக் கொடுத்த மிர்சாவையும் 51 (33) ரன்னில் பந்தால் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: சூரியகுமாருக்கு நன்றி.. ஓமன் அணிக்கு இந்தியா இந்த 2 ஹெல்ப் செஞ்சா நல்லாருக்கும்.. கேப்டன் கோரிக்கை

இறுதியில் ஜிதன் ரமணண்டி 12* (5) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 167/4 ரன்களை மட்டுமே எடுத்த ஓமன் போராடி தோற்றது. மொத்தத்தில் 9 விக்கெட்டுகள் ஓமன் கைவசம் வைத்திருந்த போது அபார கேட்ச் பிடித்த பாண்டியா 1 விக்கெட்டையும் எடுத்தார். அதனால் 20வது இடத்தில் இருக்கும் கத்துக்குட்டி ஓமனிடம் சந்திக்க வேண்டிய அவமானத் தோல்வியிலிருந்து நம்பர் ஒன் இந்தியாவை பாண்டியா காப்பாற்றினார் என்றால் மிகையாகாது.

Advertisement