IND vs PAK : 2017இல் தவறவிட்டாலும் இம்முறை அசராமல் சாதித்து 15 வருட அசத்தல் சாதனையை தகர்த்த பாண்டியா – ஜடேஜா

Ravindra Jadeja Hardik Pandya
- Advertisement -

உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை போட்டி துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் தரமான வேகப்பந்து வீச்சில் 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 (42) ரன்கள் எடுத்த இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா 12 (18) ரன்களிலும் விராட் கோலி 35 (34) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த நிலைமையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதனால் 89/4 என தடுமாறிய இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான போது ஆச்சரியப்படும் வகையில் 4வது இடத்தில் களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா இந்தியாவை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

- Advertisement -

வெற்றி பார்ட்னர்ஷிப்:
இந்த இருவருமே எளிதில் விக்கெட்டை விடக்கூடாது என்ற வகையில் நிதானமாகவும் அதே சமயம் சிங்கிள், டபுள் போன்ற ரன்களையும் சுமாரான பந்துகளில் அதிரடியான பவுண்டரிகளையும் பறக்கவிட்டு ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்தனர். குறிப்பாக ஹரிஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா வெற்றி உறுதி செய்த போது கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (29) ரன்கள் எடுத்து ஜடேஜா ஆட்டமிழந்தார்.

அதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டாலும் அதற்கு அஞ்சாத பாண்டியா 4வது பந்தில் சிக்சர் அடித்து 33* (17) ரன்களை 194.12 என்ற ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்த இந்தியா கடந்த வருடம் இதே துபாயில் உலக கோப்பையில் முதல் முறையாக அவமான தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து அசத்தியது.

- Advertisement -

மறக்கமுடியாத 2017:
இப்போட்டியில் வழக்கம்போல பாகிஸ்தானுக்கு எதிராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா – ஹர்திக் பாண்டியா ஆகியோர் வெற்றி பெற வைத்தது கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியை சில இந்திய ரசிகர்களுக்கு நினைவு படுத்தியது. ஏனெனில் இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த தொடரில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய இந்தியா இறுதிப் போட்டியில் முதலில் சுமாராக பந்துவீசி 338/4 ரன்களை வாரி வழங்கியது.

குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய நோ பாலில் அவுட்டாகி தப்பிய பகார் ஜமான் 114 (106) விளாசினார். அதை துரத்திய இந்தியாவுக்கு முகமது ஆமிரிடம் சிக்கிய ரோகித் சர்மா 0, விராட் கோலி 5, ஷிகர் தவான் 21 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக எம்எஸ் தோனி 4, யுவராஜ் சிங் 22, கேதர் ஜாதவ் 9 என மிடில் ஆர்டரும் காலியானது. அதனால் 54/5 என திணறிய இந்தியா 100 ரன்களை தாண்டுமா என ரசிகர்கள் கவலையடைந்த போது களமிறங்கிய இளம் ஹர்திக் பாண்டியா பயமறியாத காளையாக சீறிப்பாய்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

15 வருட பார்ட்னர்ஷிப்:
4 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 76 (43) ரன்களை தெறிக்கவிட்ட அவரை பார்த்து பாகிஸ்தான் நடுங்கிய போது தேவையின்றி அவரை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா தாமும் 15 ரன்களில் அவுட்டாகி இறுதியில் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்திக்க காரணமானார். ஒருவேளை அந்த ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்று இப்போதும் ரசிகர்கள் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் அன்றைய நாளில் செய்த தவறை இப்போட்டியில் செய்யாத அவர்கள் நல்ல புரிதலுடன் விளையாடி 5வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை பதிவு செய்தனர். இதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 5வது விக்கெட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற தோனி – உத்தப்பா ஆயோரின் 15 வருட சாதனையையும் தகர்த்த அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்தப் பட்டியல்:
1. ஹர்திக் பாண்டியா – ரவிந்திர ஜடேஜா : 52, 2022*
2. எம்எஸ் தோனி – ராபின் உத்தப்பா : 46, 2007
3. விராட் கோலி – ரவீந்திர ஜடேஜா : 41, 2021
4. எம்எஸ் தோனி – விராட் கோலி : 35*, 2016

Advertisement