ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தாவை தோற்கடித்து தங்களது முதல் வெற்றியை பெற்றது. மார்ச் 31ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 16.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரகுவன்சி 29 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய மும்பையை ரியான் ரிக்கல்டன் 62* (41), சூரியகுமார் யாதவ் 27* (9) ரன்கள் எடுத்து 12.5 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்த கொல்கத்தாவுக்கு ரசல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அஸ்வனி குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பாண்டியா பாராட்டு:
இந்த வருடம் முதல் போட்டியிலேயே கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் புதூர் எனும் இளம் வீரருக்கு மும்பை நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது. அதில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அவர் சென்னைக்கு சவால் கொடுத்தார். அதே போல இந்தப் போட்டியில் மொஹாலியைச் சேர்ந்த அஸ்வனி குமார் அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்து மும்பையின் வெற்றியில் பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் இது போன்ற திறமையான இளம் வீரர்களை வருடத்தின் மற்ற நாட்களில் இந்தியா முழுவதும் பயணித்து மும்பை ஸ்கௌட் நிர்வாகம் கண்டறிவதாக கேப்டன் பாண்டியா பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி பாண்டியா பேசியது பின்வருமாறு. “சொந்த மண்ணில் கிடைத்த இந்த வெற்றியில் மிகவும் திருப்தி. ஒரு அணியாக செயல்பட்ட எங்களுக்கு ஒவ்வொரு வீரரும் வெற்றியில் பங்காற்றினர்”
முதல் வெற்றி:
“எனவே இதை விட மகிழ்ச்சியாக இருக்க முடியாது. வெற்றிக்கு காரணமான ஒரு வீரரை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான ஒன்று. பிட்ச் கொஞ்சம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக உதவி செய்தது. அந்த சூழ்நிலையில் அஸ்வனி வந்து தாம் பவுலிங் செய்யக்கூடிய முறையில் அசத்தினார். முதலில் இவை அனைத்துக்கும் காரணம் எங்களுடைய அணி நிர்வாகமாகும். எங்களுடைய அணி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் அனைத்து இடங்களுக்கும் சென்று இது போன்ற திறமையான இளம் குழந்தைகளைத் தேர்வு செய்கிறார்கள்”
இதையும் படிங்க:கடவுள் அருளால் கிராமத்தை சேர்ந்த எனக்கு இது பெருசு.. பாண்டியா தான் இந்த திட்டம் கொடுத்தாரு.. அஸ்வனி பேட்டி
“இடது கை வீரராக இருக்கும் அஸ்வனியிடம் வித்தியாசமான ஆக்சன், தாமதமான ஸ்விங், ஜிப் ஆகியவை இருக்கிறது. ரசல் விக்கெட்டை அவர் எடுத்த விதம் மிகவும் முக்கியம். டீ காக் கேட்ச்சை பிடித்து ஆட்டத்தை சிறப்பாகத் துவங்கிய அவரை போன்ற வேகப்பந்து வீச்சாளர் அசத்துவத்தைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல் எங்கள் வீரர்கள் அனைவரும் வெற்றியில் பங்காற்றி தொடரைத் துவக்கியது சிறந்த அறிகுறி” என்று கூறினார்.



