ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 29வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை ரியான் ரிக்கல்டன் 41, சூரியகுமார் யாதவ் 40, திலக் வர்மா 59, நமன் திர் 38* ரன்கள் எடுத்த உதவியுடன் 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
டெல்லிக்கு அதிகபட்சமாக விப்ராஜ் நிகாம் 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய டெல்லிக்கு கருண் நாயர் – அபிஷேக் போரேல் 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அப்போது போரேலை 33 (25) ரன்களில் காலி செய்த கரன் சர்மா மிடில் ஆடரில் கேஎல் ராகுல் 15, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்னில் அவுட்டாக்கி அசத்தினார்.
மும்பை வெற்றி:
அதே போல மறுபுறம் போராடிய கருண் நாயர் 89 (40) ரன்னில் மிட்சேல் சான்ட்னர் சுழலில் சிக்கினார். இறுதியில் அக்சர் படேல் 9, அசுட்டோஸ் சர்மா 17, விப்ராஜ் நிகாம் 14 ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். அதனால் 19 ஓவரில் 193 ரன்களுக்கு சுருண்ட டெல்லி தங்களது முதல் தோல்வியை சந்தித்தது.
மறுபுறம் 2வது வெற்றியைப் பெற்ற மும்பைக்கு அதிகபட்சமாக கரன் சர்மா 3, மிட்சேல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இந்நிலையில் இந்தப் போட்டியில் கருண் நாயர் ஆட்டத்தால் கைமீறிய வெற்றியை கரன் சர்மா 3 விக்கெட்கள் சாய்த்து மீண்டும் பெற்றுக்கொடுத்து உதவியதாக மும்பை கேப்டன் பாண்டியா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ஸ்பெஷல் வெற்றி:
“இது போன்ற வெற்றி எப்போதும் ஸ்பெஷல். கருண் நாயர் சிறப்பாக பேட்டிங் செய்ததால் வெற்றி கை மீறியது போல் தெரிந்தது. அப்போது கரண் சர்மா வெறும் 60 மீட்டர் பௌண்டரிகள் கொண்ட இந்த மைதானத்தில் தன்னுடைய போராட்டக் குணத்தை காண்பித்து தைரியமாக காற்றில் பந்து வீசினார். எப்போதும் வெற்றியை விட விரும்பாத நாங்கள் தொடர்ந்து போட்டியில் இருக்க விரும்புகிறோம்”
இதையும் படிங்க: 12 ரன்ஸ் 3 ரன் அவுட்.. டெல்லியை சாய்த்து மும்பை.. 2008க்குப்பின் 17 வருடங்கள் கழித்து தனித்துவ வெற்றி
“எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களது கைகளை உயர்த்தி வெற்றியில் பங்காற்றினர். ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை எதிர்கொள்ள விரும்பியதால் எனது பேட்டிங் இடத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். பனி இரவு நேரத்தில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதும் வெற்றியை விடாமல் தொடர்ந்து போராட வேண்டும் என்ற கோட்பாட்டை பின்பற்றுவதில் உறுதியாக இருந்தோம். சில விக்கெட்டுகள் போட்டியை மாற்றும் என்பது தெரியும். இது போன்ற வெற்றிகள் வேகத்தை கொண்டு வந்து எங்கள் அணியின் அனைத்து விஷயங்களையும் மாற்றக்கூடிய வல்லது” என்று கூறினார்.



