ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. அந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் பரம எதிரி சென்னையை எதிர்கொள்கிறது. மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் அந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தடை காரணமாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட அவரது தலைமையில் 3 போட்டிகளில் மும்பை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பௌலிங் செய்யவில்லை. குறிப்பாக கடைசி லீக் போட்டியில் 3வது முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்யாததால் பாண்டியாவுக்கு அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அந்தப் போட்டி தற்போது சென்னைக்கு எதிராக நடைபெற உள்ளது.
சூரியகுமார் ஃபார்ம்:
எனவே அந்தப் போட்டியில் தமக்குப் பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் பாண்டியா தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் 2, 0, 14, 12, 0 என 5 போட்டிகளில் சேர்த்து சூரியகுமார் வெறும் 28 ரன்களை மட்டுமே எடுத்தார். மேலும் சமீபத்திய போட்டிகளில் அவர் சுமாராக விளையாடியதால் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் இழந்துள்ளார்.
அந்த வகையில் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் சூரியகுமார் தற்சமயத்தில் ஃபார்மில் இருப்பது மும்பை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மேட்ச் வின்னராக செயல்படும் சூரியகுமார் யாதவ் ஃபார்ம் பற்றி கவலைப்படவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
பாண்டியா ஆதரவு:
“சூரியகுமார் யாதவ் பற்றி நீங்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு நாங்கள் கவலைப்படவில்லை. நீண்ட வருடங்களாக அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். எனவே அவரது ஃபார்ம் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்த வரை அவர் புத்திசாலித்தனமான பேட்ஸ்மேன். இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மேட்ச் வின்னராக இருக்கிறார்”
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா திருமண வாழ்க்கை – கைமாறிய கோடிகள்
“அவர் எங்கள் அணிக்காக எப்போதும் எனர்ஜியைக் கொண்டு வரக்கூடியவர். அதனால் அவருடைய ஃபார்ம் பற்றி நான் கவலைப்படவில்லை” என்று கூறினார். இது போக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதும் மும்பை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.