
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா 2025 சாம்பியன் டிராபி இறுதிப் போட்டிக்கு பிறகு தற்போது மீண்டும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தான் கம்பேக் கொடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த 17-வது ஆசிய கோப்பை தொடரில் ஆல்ரவுண்டராக விளையாட இருக்கும் அவர் இந்திய அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் வேகப்பந்து வீச்சாளராக பவுலிங் பங்களிக்கும் ஹார்டிக் பாண்டியா, பினிஷராகவும் அதிரடியான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தக் கூடியவர். இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா இந்திய டி20 அணியின் முன்னணி வீரராக பார்க்கப்படுகிறார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 114 போட்டிகளில் விளையாடி 5 அரை சதங்களுடன் 141.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 27.9 ரன்கள் சராசரியுடன் 1812 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி பந்து வீச்சிலும் 94 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடயிருக்கும் ஹார்டிக் பாண்டியா முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை டி20 போட்டிகளில் நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் மேலும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார்.
அது மட்டும் இன்றி ஏற்கனவே அவர் பேட்டிங்கில் டி20 போட்டிகளில் 1500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதால் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் இந்திய வீரராக 1500+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய ஆல்ரவுண்டர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்ததில் மகிழ்ச்சி.. டி20 கம்பேக் குறித்து பேசிய – ஜஸ்ப்ரீத் பும்ரா மகிழ்ச்சி
ஒட்டுமொத்தமாக இந்திய அணி சார்பாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் (99 விக்கெட்டுகள்) முதலிடத்திலும், யுஸ்வேந்திர சாஹல் (96 விக்கெட்டுகள்) இரண்டாவது இடத்திலும் இருக்கும் வேளையில் மூன்றாவது இடத்தில் ஹார்திக் பாண்டியா (94 விக்கெட்டுகள்) உள்ளது குறிப்பிடத்தக்கது.