
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்து சில தினங்களுக்கு முன்னர் பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவும் இடம் பிடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக பாண்டியா திகழ்ந்து வருகிறார்.
ஏனெனில் ஒரு முழுநேர வேகப்பந்து வீச்சாளராக நான்கு ஓவர்களையும் வீசும் திறன் கொண்ட ஹர்திக் பாண்டியா போட்டியின் முக்கியமான நேரங்களில் விக்கெட் எடுத்து ஆட்டத்தை திருப்பக்கூடியவர். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் பின்வரிசையில் பினிஷராக களமிறங்கும் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தனி நபராக பெற்றுத்தரும் பலம் கொண்டவர்.
இதனால் இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரராக கடந்த பல ஆண்டுகளாக டி20 அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கும் ஹார்டிக் பாண்டியா முன்னணி வீரரான கே.எல் ராகுலின் முக்கிய சாதனை ஒன்றினையும் முறியடிக்க காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் கே.எல் ராகுல் 99 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது 95 சிக்ஸர்களுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹார்டிக் பாண்டியா இந்த ஆசிய கோப்பை தொடரில் 5 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் கே.எல் ராகுலை கடந்து இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்து நான்காவது இடத்திற்கு முன்னேறுவார்.
இந்த பட்டியலில் இந்திய அணி சார்பாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 205 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், தற்போதைய கேப்டன் சூரியகுமார் யாதவ் 146 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 124 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகும் ரோஹித்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – அடிக்கவுள்ள ஜாக்பாட்
எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் ஹார்டிக் பாண்டியா மேலும் 5 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் கே.எல் ராகுலை தாண்டுவது மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்களை அடித்த நான்காவது இந்திய வீரர் என்று சாதனையும் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.