கடந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு ரோகித் சர்மா சர்வதேச டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக கேப்டன்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேடிங் செய்யப்பட்ட பாண்டியாவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டன் :
இப்படி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை பதவி நீக்கம் செய்துவிட்டு அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன்சி கொடுத்தது அப்போதே பலரது மத்தியிலும் பெரிய விவாதத்தை எழுப்பியது. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவருக்கு கேப்டன்சி வழங்கியதாக அறிவித்திருந்தது.
இருந்தாலும் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையின் கீழ் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் தொடரிலும் இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகமும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கடைசி ஓவர் வரை வந்து நாங்க தோல்வியை சந்திக்க இதுவே காரணம் – சூரியகுமார் யாதவ் பேட்டி
அப்படி ஹார்டிக் பாண்டியா கேப்டன் பதிவியிலிருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக திலக் வர்மாவை தேர்வு செய்ய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. ஏனெனில் மிகச் சிறப்பான டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் திலக் வர்மா நீண்ட கால வீரராகவும் இருப்பதினால் அவரை கேப்டனாக மாற்றும் முயற்சியில் மும்பை அணி இறங்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



