ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிரட்டலாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. கடந்த வருடம் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட அவரது தலைமையில் மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து தடுமாறியது. அதே போல இந்த வருடமும் ஆரம்பகட்டப் போட்டிகளில் தடுமாறிய மும்பை 9வது இடத்தில் தவித்தது.
இருப்பினும் அதன் பின் கொதித்தழுந்த மும்பை கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் 6 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் முதலிடத்திற்கு முன்னேறியுள்ள மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக மே ஒன்றாம் தேதி ஜெய்ப்பூரில் மும்பை விளையாடியது.
7 தையல்கள்:
அந்தப் போட்டியில் நூறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றியதைப் போலவே கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக பங்காற்றினார். குறிப்பாக பேட்டிங் துறையில் 6 பவுண்டரி ஒரு சிக்சரை அடித்த அவர் 48* (23) ரன்கள் குவித்து சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தார்.
பந்து வீச்சில் ஒரு ஓவரில் 2 ரன் மட்டும் கொடுத்த பாண்டியா 1 விக்கெட் எடுத்து அசத்தினார். அப்படி அப்போட்டியில் அவர் தன்னுடைய வலது கண்ணுக்கு மேலே 7 தையல்களை போட்டுக்கொண்டு விளையாடியது மும்பை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதற்கான காரணம் என்னவெனில் ராஜஸ்தான் போட்டிக்காக பாண்டியா வழக்கமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அர்ப்பணிப்புடன் பாண்டியா:
அந்தப் பயிற்சியின் போது ஒரு லோக்கல் ஸ்பின்னருக்கு எதிராக பாண்டியா ஸ்வீப் ஷாட்டை அடிக்க முயற்சித்துள்ளார். அதை தவற விட்டதால் பந்து அவருடைய கண்ணுக்கு மேலே பட்டு காயத்தை உண்டாக்கியது. அந்த காயத்திற்காக தான் அவர் 7 தையல்கள் போட்டுக்கொண்டதாக மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒருவேளை பாண்டியா நினைத்திருந்தால் ராஜஸ்தான் போட்டியில் விளையாடாமல் ஓய்வை எடுத்திருக்க முடியும்.
இதையும் படிங்க: இந்த வாய்ப்பை மட்டும் நிர்வாகம் கொடுத்தா.. நான் மீண்டும் இந்திய அணிக்கு விளையாட தயார் – புஜாரா விருப்பம்
இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப் பெறுவதற்கு ராஜஸ்தான் போட்டியில் விளையாடுவது அவசியமாக இருந்தது. அதனால் அர்ப்பணிப்புடன் காயத்தையும் தாண்டி விளையாடிய பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றினார். மேலும் அந்த தையல்கள் மேல் பந்து படாமல் இருப்பதற்காக பாண்டியா ஸ்பெஷல் கண்ணாடியை அணிந்து கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.



