ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29ஆம் தேதி அகமதாபாத் நகரில் 9வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்களது முதல் வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சாய் சுதர்சன் 63, கேப்டன் கில் 38, பட்லர் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
மும்பைக்கு அதிகபட்சமாக ஹரிதிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய மும்பை ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 160-6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் 48, திலக் வர்மா 39 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 2, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
கம்பேக் போட்டியில் பரிதாபம்:
அதனால் மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய இரண்டாவது தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. முன்னதாக இந்த வருடத்தின் முதல் போட்டியில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தடை காரணமாக விளையாடவில்லை. அதாவது கடந்த வருடம் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ரோஹித்தை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.
அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மோசமாக விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. மேலும் அவரது தலைமையில் 3 முறை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை பவுலிங் செய்து முடிக்கவில்லை. அதனால் 2 முறை அபராதத்தை மட்டும் சந்தித்த பாண்டியா 3வது முறையில் அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாடத் தடை பெற்றார்.
மீண்டும் அபராதம்:
அதனால் இந்த வருடம் சென்னைக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் பாண்டியா தடை காரணமாக விளையாடவில்லை. அந்த நிலையில் இப்போட்டியில் தடையிலிருந்து கம்பேக் கொடுத்த பாண்டியா தலைமையில் மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை பவுலிங் செய்து முடிக்கவில்லை. அதனால் 2.2 ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறையை மீறிய பாண்டியாவுக்கு இப்போட்டியின் சம்பளத்திலிருந்து 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கிரிஸ் கெயிலுக்கு அடுத்து ஐ.பி.எல் தொடரில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில் – விவரம் இதோ
இந்த வருடத்தில் முதல் முறையாக 2.2 விதிமுறையை மீறுவதால் பாண்டியாவுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது. மீண்டும் இந்தத் தவறை செய்தால் அவருக்கு அபராதத்துடன் கருப்பு புள்ளியும் வழங்கப்படும். மொத்தத்தில் 2024இல் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக தடைப் பெற்ற பாண்டியா 2025இல் அதிலிருந்து கம்பேக் கொடுத்த போட்டியில் மீண்டும் பரிதாபமான அபராதத்தை சந்தித்துள்ளார்.



