
விஜய் ஹசாரே கோப்பை 2025/26 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் ஜனவரி 8ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகித்த பரோடா – சண்டிகர் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பரோடா முதலில் பேட்டிங் செய்து 49.1 ஓவரில் அதிரடியாக 391 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரியன்சு மோலியா சதமடித்து 113, விஷ்ணு சோலங்கி 54 ரன்கள் எடுத்தனர். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 9 சிக்ஸர்களை பறக்க விட்டு 75 (31) ரன்கள் குவித்து மிரட்டினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜித்தேஷ் சர்மா 73 (33), அஸ்வின் குமார் 38 (38) ரன்கள் எடுத்தனர்.
சண்டிகருக்கு அதிகபட்சமாக ஜக்ஜித் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய சண்டிகர் அணி பரோடா பவுலர்களின் நல்ல பந்து வீச்சில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 40 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் பம்ரி சதமடித்து 100 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர்.
அதனால் பரோடா 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மகேஷ் பிதியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா முழுமையாக 10 ஓவர்கள் வீசி 66 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
கடந்த 2025 ஆசியக் கோப்பையில் காயமடைந்த அவர் மீண்டும் குணமடைந்து கடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்திய பாண்டியா இந்தியாவின் வெற்றிகளிலும் பங்கேற்றினார். இருப்பினும் புத்தாண்டில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: வேற யாருக்கும் இல்ல.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் அந்த வாய்ப்பு – பி.சி.சி.ஐ எடுக்கவுள்ள முடிவு
அதற்கு காயத்திலிருந்து குணமடைந்த பின் ஹர்திக் பாண்டியா என்சிஏவில் முழுமையாக 10 ஓவர்கள் வீசி ஃபிட்னஸை நிருபிக்கவில்லை என்று பிசிசிஐ தெரிவித்தது. அதனாலேயே 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் அவருடைய பணிச்சுமையை நிர்வகிக்கும் நோக்கத்தில் நியூஸிலாந்து ஒருநாள் தொடரில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் முழுமையாக 10 ஓவர்கள் வீசிய பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடத் தயாராக இருக்கிறேன் என்பதை அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு தன்னுடைய ஃபிட்னஸை நிரூபித்து காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.