- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் கருப்பு குதிரையாக ஓடும் ஹர்டிக் பாண்டியா – மற்றுமொரு புதிய வரலாற்று சாதனை

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்களுக்கு பின் 2வது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மசூட் 52* ரன்களும் இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என 3 துருப்பு சீட்டு வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 31/4 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அடுத்ததாக களமிறங்கி விராட் கோலியுடன் கை கோர்த்த ஹர்திக் பாண்டியா 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த நிலையில் கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் தினேஷ் கார்த்திக் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றாலும் அடுத்ததாக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் அதே தவறை செய்யாமல் கடைசி பந்தை லாவகமாக தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கருப்பு குதிரை:
அதனால் யாருமே எதிர்பாராத வகையில் அற்புதமான வரலாற்று வெற்றியை பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சந்தித்த வரலாற்று தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தானை பழி தீர்த்துக் கொண்டது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரை விட பேட்டிங்கில் 40 ரன்களும் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் எடுத்த ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்று கூறலாம்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக எந்த ஒரு விக்கெட்டுக்கும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த முதல் இந்திய ஜோடி (113) என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தே சாதனையாக இருந்த நிலையில் அதை இப்போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து அவர் முறியடித்துள்ளார்.

- Advertisement -

அதை விட பந்து வீச்சு துறையிலும் சடாப் கான் 5, ஹைதர் அலி 2, முகமது நவாஸ் 9 என 3 முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்து மிரட்டினார். அப்படி விராட் கோலியும் மிஞ்சும் வகையில் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் அட்டகாசமாக செயல்பட்ட அவர் இப்போட்டியில் குவித்த 40 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் சேர்த்து 1029 ரன்களையும் 57 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1000+ ரன்கள் மற்றும் 50+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா உட்பட வேறு எந்த இந்திய வீரரும் இதைச் செய்ததில்லை. மேலும் சமீபத்திய ஆசிய கோப்பையிலும் இதே போல் அற்புதமாக செயல்பட்ட அவர் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 முறை ஒரு போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சிறப்பான சாதனையும் படைத்துள்ளார்.

கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் காயத்தால் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் அற்புதமான ஆல் ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன் பதவியில் அனைத்து வீரர்களையும் அபாரமாக வழி நடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று மீண்டும் கம் பேக் கொடுத்தார். அப்போது முதல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் விலை மதிப்பு மிக்க வீரராக பாகிஸ்தான் போன்ற இதர அணிகளிடம் இல்லாத மகத்தான ஆல்-ரவுண்டராக கலக்கும் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் கருப்பு குதிரையாக வெற்றிகளில் பங்காற்றி வருகிறார் என்பது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

- Advertisement -
Published by